share

Thursday, April 30, 2015

வேலையை விடுத்து தொழில் தொடங்க வேண்டுமா ? அப்போ இந்த 20 உத்திகளை தெரிந்துகொள்ளுங்கள் !


வேலையை  விடுத்து தொழில் தொடங்கலாமா? வேலையின் போது கிடைத்த அதே வருமானத்தை தொழிலில் ஈட்டுகிற   காலம்  எப்போது வரும்? தொழிலை  எங்கிருந்து தொடங்குவது? விலை நிர்ணயிப்பது எப்படி? பணத்திற்கு எங்கே போவது? என்பது போன்ற பல கேள்விகள்  தொழில் தொடங்க விரும்புவோருக்கு எழும்.
             தொழிலில் மிக முக்கியமான காலக்கட்டம் எது தெரியுமா? வேலையை விடுத்து, தொழில் தொடங்கி நிலைபெறச் செய்து, இன்னொருவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு வளர்வது வரையிலான காலகட்டமே. இந்தக்  காலகட்டத்தைக் கடந்து விட்டால், பாதித் தொலைவு தாண்டியது மாதிரி.
             தொழில்முனைவர்கள் எல்லாம் பெரும்பாலும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து, பிறகு சிறிய முதலீட்டில் தனியொரு ஆளாகத் தொழில் தொடங்கி, கஷ்டப்பட்டு பிறகுதான் வளரத் தொடங்கி இருப்பார்கள்.
             CATALYST PUBLIC RELATIONS PVT LTD நிறுவனத்தின் தலைமை  செயல் அதிகாரியான ( CEO) திரு.இராம்குமார்  சிங்காரம் பல்வேறு தொழில்முனைவர்களையும் பொதுமைப்படுத்தி ,அவர்கள் தொழிலில் நிலைத்து நின்றதற்கான  காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை 20 உத்திகளாக தந்திருக்கிறார் .வேலையை விடுத்து தொழிலில் இறங்க விரும்புகிற அனைவருக்கும் பயன்தரக்கூடியதாக  இருக்கும். இதோ,தனி ஆளாக தொழிலில் வெற்றி பெற அந்த 20 உத்திகள்.
              

 1.வேலையை விடுக்கின்ற போது  , உங்களுக்கான மாதந்திர  வருமானம் நின்றுபோகும். இதனால் உங்கள் வீட்டுச் செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டுக்கடன்  போன்றவற்றைச் சமாளிக்க குறைந்தபட்சம் 6 மாதங்களுக்காவது பணம் தேவை. இந்த தொகையை ஏற்பட்டு செய்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டும்.          

 2.இதுமட்டுமில்லாமல், கூடுதலாக இரண்டு வகையான முதலீடுகளுக்கும்(Capital)  உங்களுக்கு பணம் தேவைப்படும் . ஒன்று , தொழில் தொடங்குவதற்காக -ஒரு முறை செய்யப்பட வேண்டிய நிரந்திர முதலீடு( Fixed Capital)  (அலுவலக வாடகை முன்பணம்(Office advance) , எந்திரங்கள் (Machinery)  , கணினி(Computer) போன்ற மின் மற்றும்  மின்னணு சாதனங்கள்(Electric & Electronics Goods), மேசை-நாற்காலிகள்(Furniture’s) , வாகனம்(Vehicles)  போன்ற  பல ).
இரண்டாவது, ஆறு மாதங்களுக்குத் தேவையான நடைமுறை மூலதனம்( Working Capital)  (வாடகை(Rent) , ஊழியர் சம்பளம்(Salaries), மின் மற்றும் தொலைபேசி கட்டணம்(Electric & Telephone Charges),  பயணச் செலவு (Travel Expenditures), விளம்பர செலவு(Advertisement Cost), பொருள் கொள்முதல்(Raw Material Cost) போன்றவை ), இந்த இரண்டு தேவைகளுக்கும் பணம் இருந்தால் மட்டுமே நீங்கள் தொழில் தொடங்க வேண்டும்.
                 
  3.தொழில் தொடங்க விரும்புவோர் , வேளையில் இருந்து கொண்டே அதற்கான தொடக்ககட்ட பணிகளை முடித்துவிட வேண்டும். அதாவது தொழிலுக்கான  Project Report தயாரித்தல், இடத்தை தேர்வு செய்தல் , TIN(Tax-Payer Identification Number), VAT(Value Added Tax Registration),PAN (Permanent Account Number),CST (Central sales Tax ), IEC (Import & Export Code), Company Registration போன்ற   அரசு நடைமுறைகளை நிறைவு செய்தல் , தொழிலுக்கு தேவைப்படும் அரசு அனுமதிகளை ( License ) பெறுதல் , வங்கி கணக்கு (Bank Account)  தொடங்குதல், அலுவலக உள் மற்றும் வெளி அலங்கார வேலைகளை மேற்கொள்ளுதல் , Business Card, Letter Pad, Brochure, Palm let  போன்றவற்றை  முன்கூட்டியே தயாரித்தல்,   உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டால், முதல் நாளில் இருந்தே வருமானத்தில் கவனம் செலுத்தலாம்.
        
  4.வேலையை விடுத்தவுடன் வீணாக்குகிற   ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வருமான இழப்பாகும்  . அதுமட்டுமல்ல… அன்றிலிருந்தே தொழிலை நடத்துவதந்கான  செலவும் தொடங்கிவிடும்.

5.எல்லாவற்றையும்விட , வாடிக்கையாளரையும்(Customers) கண்டறிந்து விட்டால் வேலை எளிதாகி விடும் . உங்களுடைய தொழிலில் , நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது , வருமானம் தரக்கூடிய  வாடிக்கையாளர்களைத்தான்( Revenue Customers)  .

6.வருமான உத்தரவாதம் இல்லாதவரை , தொழில்முனைவர் தொழிலை தள்ளிப் போடுவது நல்லது.

7.தொழில் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் பலரிடம் தொழில் தொடங்கப் போகின்ற செய்தியைச் சொல்லி அதைப் பரவலாக்க வேண்டும் .அப்போதுதான் வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடிவருவார்கள் .

8.உங்கள் தொழிலில்  பிற வருமானம் தரக்கூடிய ( Other Revenue Sources)  வழிகளை முடிந்தவரை அதிகரிக்கச் செய்யுங்கள் .

9.கல்லாவில் பணம் புழங்குகிற தொழிலாக  இருந்தால் ,தொழிலை கணினிமயம் ஆக்குகிற வரை நீங்கள்தான் கல்லாவில் அமரவேண்டும்.

10.தொழிலை தொடங்கத் திட்டமிடுகிறபோது, நீங்கள் உருவாக்குகிற திட்டம் இழப்பைத் தருமானால், அடுத்து மாற்று வழி ( Alternative Planning) என்ன என்பதையும்  முன்கூட்டியே திட்டமிட வேண்டும் .

11.உங்களைவிட அறிவாளிகளை உடன் வைத்துக்   கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்திற்கு தொழில் ஆலோசகர்களும் , வழிகாட்டிகளும் மிக,மிக முக்கியம் . குறிப்பாக திறமையான Auditor , Business Advisor, Business analyst,Advocate , Human Resource Advisor  போன்றோரை எப்போதும் கலந்து ஆலோசித்த பிறகே முடிவுகளை எடுங்கள்.

12.எந்த பொருளையும் கொள்முதல் செய்கின்றபோது குறைந்தபட்சம் மூன்று Supplier  களிடமாவது விலைப்பட்டியலைப் ( Price Quotation)  பெறுங்கள். இணையதளத்தில் உலவி (Search in Internet) கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

13.உங்கள் தொழில் வளர்ச்சி அடைகிற வரை ,குடும்பத்தினரில்   யாரவது ஒருவருடைய உதவி உங்களுக்கு அவசியம் தேவை .

14.தொழில் வளர்கிற வரை பிடிவாதம் வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற படி, நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ளுங்கள் . உங்கள் திறமையை நிரூபித்தபின் உங்கள் ஆலோசனைகளை கேட்க அவர்கள் முன் வருவார்கள் .

15.முடிந்த வரை வாடகை ,சம்பளம் போன்ற நிரந்தரச் செலவுகளை குறைத்துக் கொண்டு , கொள்முதல் ,விளம்பரம் போன்ற மாறிக் கொண்டிருக்கும் செலவுகளை  அதிகரித்துக் கொள்வது நல்லது . இதனால், பணத் தேவையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

16.தொழிலில் எவ்வளவு முதலீடு , அதை  விட இரண்டு மடங்கு வரை நீங்கள் கடன் வாங்கலாம். அதற்கு மேல் வாங்கினால், இடர்கள் அதிகம்.

17.வாங்குகிற கடன்களுக்கெல்லாம் மாதந் தோறும்   வட்டியை மட்டுமே செலுத்தாமல், அசலில் ஒரு பகுதியையும் திருப்பிச் செலுத்தப் பழகுங்கள்.

18.முடிந்தவரை Supplier-களிடம் பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான காலக்கட்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

19.எளிதில் பணம் கிடைக்கிறது என்பதற்காக, பல தொழில்களில் கவனம் செலுத்தாதீர்கள்( Don’t Focus Many-things)  . நீங்கள் பணத்தை  தேடி ஓடுவதை  விட , பணம் உங்களைத் தேடி வரும் வகையில் , உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள் .

20. மாதந்தோறும் உறுதியாக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே , ஒரு ஆளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். அதுவரை நீங்கள் தனி ஆளாக ஓடிக்கொண்டே இருங்கள் .

நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.


ஆயிரம் ரூபாய் போதும் ; பைண்டிங்கில் அசத்தலாம்!



ஆண்டு முழுவதும் படிக்கக்கூடிய பாடப்புத்தகங்கள் சிதையாமல் இருக்க பைண்டிங் செய்வது வழக்கமாக உள்ளது. பல்வேறு நிறுவனங்களில் கம்ப்யூட்டர் இருந்தாலும் ஆவணங்களை பாதுகாக்க இன்றும் பைண்டிங் செய்யப்பட்ட லெட்ஜர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பைண்டிங் தொழிலுக்கு என்றும் குறையாத வருவாய் உள்ளது. இதில், ஈடுபடுபவர்கள் வீட்டில் இருந்தவாறே ஆயிரம் ரூபாய் முதலீட்டில் சுய வேலைவாய்ப்பு பெறுவதோடு, லாபமும் அடையலாம் என்று கூறுகிறார் கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்த உமா.

அவர் கூறியதாவது: பிஎஸ்சி விலங்கியல், எம்ஏ, பிஎட் மற்றும் இந்தி படித்துள்ளேன். தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக உள்ளேன். படித்து முடித்த பிறகு, வேலை கிடைக்கும் வரை ஏதாவது தொழில் செய்யலாம் என்று இருந்தபோது, கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலையில் பல்வேறு சுய வேலைவாய்ப்பு தொழில் குறித்த பயிற்சிகளை அளித்தார்கள். அதில் சேர்ந்து புக் பைண்டிங் பயிற்சி பெற்று, வீட்டிலேயே பைண்டிங் வேலை செய்ய துவங்கினேன்.

புத்தகம் பைண்டிங் செய்வது எளிய வேலைதான். பசை காய்வதற்கு மட்டும் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தையும் தனித்தனியாக பைண்டிங் செய்யக்கூடாது. தேவையான பொருட்களை தயாராக வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக புத்தகங்களுக்கு பைண்டிங் செய்வதே சிறந்தது.  8 மணி நேரத்தில் 50 புத்தகங்களை ஒருவரே பைண்டிங் செய்து விட முடியும். புத்தக விளிம்புகளை பிரின்டிங் பிரஸ்களில் கொடுத்து கட்டிங் செய்து கொள்ளலாம்.
பெரிய முதலீட்டில், பைண்டிங் செய்ய விரும்புபவர்கள் கட்டிங் மெஷின் வாங்கி வைத்துக்கொள்ளலாம். புத்தகம் நன்றாக அமுங்க பிரஸ்சிங்மெஷின், துளை போட டிரில்லிங் மெஷின் வாங்கி கொள்ளலாம்.

இந்த மெஷின்கள் இல்லாமல் ஆயிரம் ரூபாய் முதலீடு இருந்தால்கூட தொழிலை துவக்கிவிட முடியும்.  பைண்டிங் செய்து, அதன் மூலம் வரும் வருவாய் மூலம் தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். வீட்டில் இருந்தவாறு சுய தொழில் செய்ய ஏற்ற தொழில் இது. பைண்டிங் செய்வதை ஒரு முறை பார்த்தால் போதும்; எளிதில் கற்றுக்கொள்ளலாம். ஆசிரியர் வேலை கிடைத்த பின், ஓய்வு நேரங்களில் பைண்டிங் செய்து வருகிறேன். அதன் மூலமும் வருவாய் கிடைக்கிறது.  

 


பைண்டிங் செய்வது எப்படி?

முதலில் பைண்டிங் செய்யப்படும் புத்தகங்களின் அளவுகளை தனித்தனியாக எடுத்து, அதற்கேற்ப அட்டைகள், பிரவுன் ஷீட், மார்பிள் ஷீட், காலிகோ துணியை வெட்டி வைக்க வேண்டும். பைண்டிங் செய்ய வேண்டிய புத்தக முன் அட்டையின் இடது புற மார்ஜின் பகுதியில் தையல் போடுவதற்கு இடம் விட்டு, அதற்கடுத்து ஒரு இஞ்ச் அகலத்தில் மேலிருந்து கீழாக பைண்டிங் பேஸ்ட் தடவ வேண்டும். அதன் மீது 4 பக்கம் கொண்ட டபுள்ஷீட் பிரவுன் பேப்பரை ஒட்ட வேண்டும். இதேபோல் புத்தகத்தின் பின்புறமும் ஒட்ட வேண்டும். பின்னர் பேஸ்ட் காயும் வரை காத்திருக்க வேண்டும்.

பின்னர் தையல் போட ஒதுக்கப்பட்ட பகுதியில் சம இடைவெளியில் 3 துளைகள் போட அளவெடுக்க வேண்டும். 3 துளைகள் போட உத்தேசித்த இடத்தில், மேல் துளையிலிருந்து கீழ் துளை வரையிலான பகுதியில் பேஸ்ட் தடவி காலிகோ துணியை ஒட்ட வேண்டும். ஒட்டிய துணி காயும் வரை காத்திருக்க வேண்டும். அடுத்து, காலிகோ துணியில் உத்தேசித்த இடத்தில் ஆணியால், சுத்தியல் மூலம் 3 துளை போட வேண்டும். பின்னர் முப்பட்டை ஊசியில், ட்வைன் நூலை கோர்த்து, துளை வழியாக தையல் போட வேண்டும்.

தையல் போடும் போது 3 துளைகளில் புத்தகத்தின் முன்புறமுள்ள கீழ் துளை வழியாக ஊசி நூலை விட்டு பின்புறம் இழுத்து, அதை பின்புற மத்திய துளை வழியாக விட்டு முன்புறம் இழுக்க வேண்டும். அங்கு 2 முனைகளையும் முடிச்சு போட வேண்டும். இதேபோல் புத்தகத்தின் பின்புற மத்திய துளையின் மேல் பகுதியில் மற்றொரு முடிச்சு போடும் வகையில் தைக்க வேண்டும். இவ்வாறு தையல் போட்டால் இறுக்கமாக இருக்கும். பின்னர் ஏற்கனவே ஒட்டிய பிரவுன் ஷீட்டின் வெளிப்புறம் முழுவதும் பேஸ்ட் தடவி, அதில் பைண்டிங் அட்டையை ஒட்ட வேண்டும். இதேபோல் புத்தகத்தின் பின்புறத்திலும் செய்ய வேண்டும். ஒட்டிய அட்டை காயும் வரை காத்திருக்க வேண்டும்.

புத்தகத்தில் தைக்கப்பட்ட பகுதியிலும், அதன் மேல், கீழ் பகுதிகளிலும், ஏற்கனவே ஒட்டப்பட்ட அட்டை மீது அரை இஞ்ச் அளவு வரையும் பேஸ்ட் தடவ வேண்டும். அங்கு பேஸ்ட் தடவிய அளவுக்கு வெட்டிய காலிகோ துணியை, ஒட்ட வேண்டும். பின்னர் காய வைக்க வேண்டும். காய வைக்கும்போது முன்புறம் காய்ந்தவுடன், பின்புறம் காயும் வகையில் புத்தகத்தை திருப்பி விட வேண்டும். காய்ந்த பின்னர், அட்டை மீது மார்பிள் ஷீட்டை ஒட்டி அதையும் காய வைக்க வேண்டும். பின்னர் அவற்றை மெஷினில் 3 புறமும் கட்டிங் செய்தால் சீராக இருக்கும். கட்டிங் செய்த புத்தகங்களை அடுக்கி அவற்றின் மீது வெயிட் வைத்தால் பைண்டிங் செய்த புத்தகங்களின் அட்டைகள் வளையாமல் இருக்கும். பைண்டிங் செய்யப்பட்ட புத்தகங்கள் தயார்.

தேவைப்படும் பொருட்கள்!

4
வகை ஆணி(50 காசு), சுத்தியல் (ரூ.50), 3 வகை முப்பட்டை ஊசி (ரூ.10) ஆகியன மூலப்பொருட்கள். பிரவுன் ஷீட்(குயர் ரூ.40), பைண்டிங் பேஸ்ட் (பாக்கெட் ரூ.8), காலிகோ துணி (மீட்டர் ரூ.20), ட்வைன் நூல் (ஒரு கண்டு ரூ.17), பைண்டிங் அட்டை (ஒரு ஷீட் ரூ.7), மார்பிள் ஷீட் (ரூ.2). இவை ஸ்டேஷனரி, பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும். ஆணி, சுத்தியல் ஹார்டுவேர் ஸ்டோர்களில் கிடைக்கும். பெரிய அளவில் பைண்டிங் தொழில் செய்வதாக இருந்தால் தனியாக ஒரு அறை வேண்டும்.  கட்டிங் மெஷின் (ரூ.1.5 லட்சம்), பிரஸ்சிங் மெஷின் (ரூ.5 ஆயிரம்), டிரில்லிங் மெஷின் (ரூ.2 ஆயிரம்) என ரூ.1.57 லட்சம் முதலீட்டுக்கு தேவை.

மாதம் ரூ.25 ஆயிரம் வருவாய்!

பள்ளி பாட புத்தகம் ஒன்று பைண்டிங் செய்ய ரூ.5 செலவாகும். ஒரு நாளைக்கு ஒரு நபர் 50 புத்தகங்கள் வரை பைண்டிங் செய்யலாம். இதற்கு ரூ.250 மதிப்பிலான பொருட்கள் தேவைப்படுகின்றன. 25 நாளில் 1250 புத்தகம் பைண்ட் செய்யலாம். அதற்கு ரூ.6,250 செலவாகும். பள்ளி பாட புத்தகம் ஒவ்வொன்றுக்கும் பைண்டிங் கூலி ரூ.20 வசூலிக்கப்படுகிறது. ஒரு நாளில் 50 புத்தகங்கள் மூலம் வருவாய் ரூ.1,000. செலவு ரூ.250 போக லாபம் ரூ.750. மாதம் ரூ.25 ஆயிரம் வருவாய் கிடைக்கும். இதில் லாபம் ரூ.18,750. இதை சுய தொழில் உழைப்பு கூலியாகவும் கருதலாம்.  

ஆர்டர் எளிதில் கிடைக்கும்!

வீடுகளில், ‘இங்கு பைண்டிங் செய்யப்படும்என்று சின்ன போர்டு போட்டால் போதும். கல்வியாண்டு துவக்கத்தில் 2-3 மாதங்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தங்கள் வீட்டு பள்ளி, கல்லூரி பாட புத்தகங்களை பைண்டிங் செய்ய ஆர்டர் தருவார்கள். மற்ற மாதங்களில் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்று ஆவணங்களை பெற்று வந்து பைண்டிங் செய்து கொடுக்கலாம். அச்சகங்களில் அச்சிடப்படும் பில் புக் மற்றும் நோட்டுகள் உள்ளிட்டவற்றையும் பைண்டிங் செய்ய ஆர்டர் எடுக்கலாம். எளிதில் கிடைக்கும். சிறிய அளவு முதல் பெரிய லெட்ஜர் வரை நோட்டு புத்தகங்கள் உள்ளதால்,
அதற்கேற்ப கூடுதல் கூலி கிடைக்கும்.


நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.

நன்றி :
http://adf.ly/1G70BB
Related Posts Plugin for WordPress, Blogger...