share

Saturday, May 30, 2015

மகிழ்ச்சி தரும் மறு விற்பனை !

என்னது செகண்ட் சேல்சா? வேண்டவே வேண்டாம். விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் புதுசாவே வாங்கிடலாம் என்பதுதான் ஒருகாலத்தில் மக்களின் மனநிலையாக இருந்தது. வீடு, கார் போன்ற நீண்ட காலம் உழைக்கக்கூடிய பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிக தொகைக்கு கைமாறிக் கொண் டிருந்தாலும், இதர வீட்டு உபயோகப் பொருட்களை இரண்டாவது விற்பனையில் சகஜமாக வாங்க மாட்டார்கள். ஒதுக்கி புறந்தள்ளி னார்கள்.
ஆனால் இன்று மறு விற்பனை என்பது தவிர்க்க முடியாத வர்த்தகமாக வளர்ந்து நிற்கிறது. வாங்குபவர்களுக்கு மட்டுமல்ல, உபயோகப்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதற்கும் நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது செகண்ட் ஹேண்ட் சேல்ஸ் என்கிற மறு விற்பனை சந்தை.
இணையதளங்கள் வருகைக்கு பிறகுதான் மறு விற்பனை சந்தை மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பயன் படுத்திய பொருட்களை எப்படி விற்பது என்கிற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு இணையதளங்கள் கை கொடுத்தன. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கார், வீடு என அனைத்தும் இந்த மறு விற்பனையில் கிடைக்கிறது. தேவைக்கு ஏற்ப அலசி ஆராய்ந்து, வாங்கும்போதே பார்த்து வாங்கினால் லாபம்தான் என்கின்றனர் பயனடைந்தவர்கள்.
மறு விற்பனை என்கிற செகண்ட் ஹேண்ட் விற்பனையை பொறுத்தவரை நேரடியாக வாங்குவது, ஏலத்தில் வாங்குவது மற்றும் இணையதளம் என மூன்று வகையான வாய்ப்புகள் உள்ளன.
ஆன்லைன்
பொருட்களின் புகைப்படங்களை பார்த்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இணையதளங்கள் வழங்குகின்றன. விலை நமது எதிர்பார்ப்புக்குள் இருக் கிறது என்றால் அந்த பொருளை விற்பவரோடு பேசி வாங்கி விடலாம். திருப்திகரமான விலை அல்லது பொருள் குறித்த உண்மை செய்திகள் இல்லை என்றால் வாங்கத் தேவையில்லை. இதில் நேரடியாக பொருளின் உரிமையாளர் களோடு தொடர்பு ஏற்படுவதால் கூடுதல் நம்பகத்தன்மை இருக்கிறது.
சிலர் அவசரமாக பொருளை விற்பனை செய்வார்கள். அதுபோன்ற நேரங்களில் உடனே விற்க வேண்டும் என்பதற்காக விலையை குறைத்து சொல்வர். இணையதளம் வழி பொருள்களைத் தேடுவதில் இது சாதகமான விஷயம். அதே சமயத்தில் கவனமாகவும் இருக்க வேண்டும். வீடு காலி செய்து வெளியூர் செல்பவர்கள் பொருட்களை விற்பார்கள். அந்த சமயத்தில் விலை குறைவாக இருக்கும். அவசரப்பட்டு வாங்கக்கூடாது. பொருட்களில் ஏதேனும் பிரச்சினை என்றால், அந்த உரிமையாளரை திரும்ப தேடிக் கொண்டிருக்க முடியாது. பரிசோதித்த பிறகே வாங்க வேண்டும்.
ஏலம்
பொருளை விற்பனை செய்பவ ருக்கும் வாங்குபவருக்குமான பாலமாக செயல்படுகிறார் ஏலதாரர். பொருளை வாங்கி விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் பொருளின் உரிமை யாளருக்கு சாதகமான விலை கிடைக்கவே விரும்புவார். சாதகமான விலை கிடைக்கும் பட்சத்தில் வாங்கு பவருக்கும் லாபமே. சில வங்கிகள் பொது ஏலத்தில் தங்களிடம் உள்ள சொத்துகளை ஏலத்துக்கு கொண்டுவரும். நாமே நேரடியாக பங்குபெற்றால் ஏலமுறையிலும் லாபம் பார்க்கலாம்.
நேரடி விற்பனை
மறு விற்பனைக்கு என்றே தனியாக வியாபாரிகள் இருக்கிறார்கள். விற்பனை செய்ய எண்ணம் கொண்டவர் களிடமிருந்து பொருட்களை வாங்கி வைத்திருப்பார்கள். இவர்களிடம் நமது தேவைக்கு ஏற்ப பார்த்து, சோதனை செய்து வாங்கிக் கொள்ளலாம். மறு விற்பனையை பொறுத்தவரை முன்ன ணியில் இருப்பது எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பயன்படுத்திய கார்கள் மற்றும் மர பர்னிச்சர்கள்தான் என்கிறார்கள் விற்பனையாளர்கள்
கார்கள்
இந்தியாவில் ஆண்டுக்கு 25 லட்சம் பயன்படுத்திய கார்கள் விற்பனை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2011ம் ஆண்டில் 17 லட்சமாக இருந்த பயன்படுத்திய கார்களின் விற்பனை 2014ம் ஆண்டில் 25 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 2020ம் ஆண்டில் 40 லட்சம் கார்களாக அதிகரிக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகிறது. பயன்படுத்திய கார்களைப் பொறுத்த வரை, பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களே மறுவிற்பனையில் அதிகம் விற்பனையாகின்றன.
வீடு
புது வீடு வாங்கும் விலையிலிருந்து அதிகபட்சம் 40 சதவீதம் வரை விலை குறைவாக பழைய வீட்டை வாங்கிவிடலாம். பழைய வீட்டை வாங்கப் போகிறோம் என்றால் அந்த வீட்டின் சொத்து மதிப்பை ஆராய வேண்டும் அப்போதுதான் அதற்கு சரியான விலை கொடுத்திருக்கிறோமா என்பது தெரியும்.
5 ஆண்டுகள் பழைய வீடு என்றால் புதுவீடு வாங்கும் விலையிலிருந்து 20 சதவீதம் வரை விலை குறைவாகக் கேட்கலாம். 10-15 ஆண்டுகள் பழைய வீடு என்றால் 25-30 சதவீதம் விலை குறைக்கலாம். அதாவது அந்த ஏரியாவில் புது வீடு விற்கும் விலையிலிருந்து இவ்வளவு குறைத்துக் கொண்டு விலை பேசலாம். இதனடிப்படையில்தான் வங்கிக் கடன் கிடைக்கும்.
எலெக்ட்ரானிக் பொருட்கள்

செல்போன் முதல் எல்இடி வரை அனைத்து எலெக்ட்ரானிக் பொருட் களும் செகண்ட் ஹேண்ட் விற்பனையில் கிடைக்கிறதுதான். ஒரு டிவி வாங்கு கிறோம் என்றால் எதற்காக விற்கிறார்? எத்தனை ஆண்டுகள் பழமையானது, அந்த மாடல் தற்போது விற்பனையில் உள்ளதா, சர்வீஸ் கிடைக்குமா என்கிற விவரங்களை பார்க்க வேண்டும்.
அவசரமாக விற்பனை செய்கிறார்கள் என்பதற்காக வாங்குபவர்களும் அவசரம் காட்ட வேண்டும் என்பதில்லை. நமக்கு திருப்திவரும் வரை சோதித்துதான் வாங்க வேண்டும். புதிதாக வாங்குவதை விடவும், அதே தரத்திலான பயன்படுத்திய பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கலாம் என்பது வளர்ந்து வரும் மனநிலை. அதுபோலவே மறு விற்பனை செய்து பணம் பண்ணலாம் என்கிற கருத்தும் வளர்ந்து வருகிறது. இதில் விற்பவரும் வாங்குபவரும் பயனடைவது அவரவர் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. 

நன்றி :
http://tamil.thehindu.com/

Wednesday, May 27, 2015

எந்த ஊரில் என்ன வாங்கலாம் ?

                                 பழநி
இது பண்டிகைக் காலம். வீட்டில் எது இருக்கிறதோ, இல்லையோ சர்க்கரையும், வெல்லமும் கட்டாயம் இருக்க வேண்டும். அந்த வகையில் இப்போது குறைந்த விலையில் தரமான வெல்லத்தை எங்கு வாங்கலாம்?
ழநியில் இருந்து பொள்ளாச்சி செல்லும் பிரதான சாலையில் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறிய ஊர் நெய்க்காரப்பட்டி. இவ்வூரைச் சுற்றி ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட நாட்டு வெல்லம் செய்யும் ஆலைகள் அமைந்துள்ளன. இந்த பகுதி கிராம மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் கரும்பு விவசாயம். சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பைக் கொடுப்பதைப் போல, நாட்டு வெல்ல ஆலைகளுக்கும் கரும்பைக் கொடுக்கின்றனர். இதனை பாகு எடுத்து வெல்லமாக்கி ஒவ்வொரு ஆலையும் மாதம் மூன்று லட்சம் ரூபாய் வரை பிஸினஸ் செய்கின்றன. 
சில இடங்களில் விவசாயிகள் நேரடியாக ஆலை அமைத்தும் வெல்ல உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று உற்பத்தியாகும் வெல்லத்தை மண்டிகளில் வைத்து ஏலமுறையில் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். ஏலத்தில் மூட்டைக் கணக்கிலும், ஆலைகளுக்குச் சென்று வாங்கும்போது சில்லறையாகவும் வெல்லத்தை வாங்கிவிடலாம். ஒரு கிலோ ரூபாய் 25-ல் தொடங்கி வெல்லத்தின் தரத்தையும் நிறத்தையும் பொறுத்து விலை மாறுபடுகின்றது.

இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஏஜென்ட் சம்சுதீனிடம் பேசினோம். ''இந்த பகுதியைச் சேர்ந்தவங்களோட முக்கியத் தொழில் இதுதான். இங்க ஆலைகள்ல சின்ன அச்சுவெல்லம், பெரிய அச்சுவெல்லம், உருண்டை வெல்லம் அதிக அளவில் உற்பத்தி செய்யறாங்க. உற்பத்தியானதை வெல்ல மண்டிகள்ல வைத்து விவசாயிகள், வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் விடுவோம். இதில் ஒரு சிப்பம்கிறது 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை.
இங்கு வெல்லம் வாங்க தமிழ்நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள், கேரள வியாபாரிகள் என பலரும் வருவாங்க.
கெட்டியாக இருக்கும் வெல்லம் சீக்கிரமா தூள் ஆகாது. அதுபோன்ற வெல்லம் நல்ல விலைக்குப் போகும். அது மட்டுமில்லாம, விலையை தீர்மானம் செய்வதில் நிறத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. நல்ல வெளீர் மஞ்சள் நிறம் கொண்ட வெல்லம் முதல் தரமானது. இது நல்ல விலைக்கு ஏலம் போகும். பண்டிகை காலத்தைப் பொறுத்து வெல்லத்தோட விலை ஏறியிறங்கும். அதாவது, மாசி மாதம் தொடங்கி அடுத்த ஆறு மாதங்களும் நல்ல 'சீஸன்’ என்று சொல்வோம். வெல்ல உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களிலும் விலை குறைவாகக் கிடைக்கும். விளைச்சல் கம்மியாகும்போது விலை ஏறிவிடும்'' என்றார்.
விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, ஓணம், பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் வெல்லம் அதிக அளவில் விற்பனையாகும். இதுபோன்ற விசேஷ தினங்களில் வெல்லத்தின் விலை அதிகமாக இருக்கும். இங்கு தமிழகம் முழுவதும் உள்ள சிறிய அளவில் தொழில் செய்யும் வியாபாரிகள் முதல் பெரிய அளவில் தொழில் செய்யும் வியாபாரிகளின் படையெடுப்பு அதிகம். இங்குள்ள ஆலைகளுக்குச் சென்று வாங்கும்போது நல்ல தரம் பார்த்தும், பேரம் பேசியும் வெல்லத்தை வாங்கிச் செல்லலாம். மேலும், தூள்களாக சிதைந்த வெல்லத்துண்டுகளை குறைந்த விலைக்கு வாங்கிச் செல்லவும் முடியும்.
சர்க்கரை உபயோகிக்கும் முன் நம் மக்கள் நாட்டு வெல்லத்தைத்தான் பயன்படுத்தினார்கள். அளவோடு பயன்படுத்தினால் நாட்டுவெல்லம் சிறந்த மருத்துவ குணங்கள் உடையது.  சர்க்கரைக்குப் பதிலாக வெல்லத்தை பயன்படுத்தினால் நீரிழிவு நோய் குறைவதற்கு வாய்ப்புண்டு என்கின்றனர். 
இனி, பழநிக்குச் செல்கிறவர்கள் அப்படியே பஞ்சாமிர்த டப்பாவோடு, நெய்க்காரப்பட்டி வெல்லத்தையும் கொஞ்சம் வாங்கி வரலாமே!


 Thanks :

சென்னையில் எங்கு என்ன வாங்கலாம் !


சியாவிலேயே மிகப் பெரிய பொதுநல மருத்துவமனையான சென்ட்ரல் மருத்துவமனையின் வெளியிலுள்ள பிளாட்பாரத்தில் ஐந்து ரூபாய்க்கு ரஸ்னா விற்பவனிடமும் சரி, ராயபேட்டை மல்டிப்ளெக்ஸில் ஏசி ரூமில் உயர்ரக குளிர்பானம் விற்பவனிடமும் சரி கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் இருக்கும். சென்னையில் எங்காவது ஒரு பொட்டிக் கடை வைத்து விட்டால் போதும் நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம். காரணம் ஜன நெருக்கடி நிறைந்து இருக்கும் சென்னை மிகப்பெரிய தொழில் வணிக வியாபார நகரம், அதனாலேயே சென்னை எல்லார்க்கும் எல்லாமுமாய் விளங்குகிறது. 

சென்னைக்கு புதிதாக வருபவர்களிடம் 'எல்லா பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் இடம் எது?' என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லுவார்கள் 'திநகர் ரங்கநாதன் தெரு' என்று. சென்னையை நன்றாகத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ரங்கநாதன் தெருவில் துணிகளைத் தவிர வேறு எதுவும் கிடைக்காதென்று.

வ்வொரு குறிப்பிட்ட பொருள்களும் குறிப்பிட்ட இடங்களில் தான் கிடைக்கும். காய்கறியில் தொடங்கி துணிகள், தங்க நகைகள், எலெக்ட்ரானிக் பொருட்கள், புத்தகங்கள், வாகன உதிரிபாகங்கள் என்று ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பகுதியை சென்னை தனக்குள்ளேயே ஒதுக்கிக் கொண்டுவிட்டது. 

சென்னையின் மிகப் பிரபலாமான வர்த்தக மையம் திநகரில் இருக்கும் ரங்கநாதன் தெரு, உஸ்மான் ரோடு மற்றும் பாண்டிபஜார். இந்த மூன்று இடங்களிலுமே பெண்களுக்கான ஆடைகள், ஆபரணங்கள், அணிகலன்கள் விற்கும் கடைகளும் சுடிதார் தைக்கும் தையலகங்களுமே அதிகம். அதனால் பெண்களின் கூட்டத்திற்கு இங்கு பஞ்சமே இருக்காது. இந்தியாவுக்கே  பஞ்சம் வந்தாலும் ரங்கநாதன் தெருவில் இருக்கும் கூட்டத்திற்கு மட்டும் பஞ்சமே வராது. ரங்கநாதன் தெரு மாம்பலம் ரயில் நிலைய வாசலிலேயே இருப்பதும் பேருந்து நிலையமும் நடந்து செல்லும் தூரத்திலேயே இருப்பதும் மக்களுக்கு மிகவும் வசதியாய்ப் போய்விட்டது. இந்தத் தெருவின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது சரவணா ஸ்டோர்ஸின் பெரிய பெரிய கட்டிடங்கள் தான். இந்தத் தெருவில் துணிக் கடைகளும் தையலகங்களும் அதிகம். மிகப் பெரிய பாத்திரக் கடையும் உள்ளது.    

ங்கநாதன் தெரு தொட்டுக் கொண்டிருக்கும் உஸ்மான் ரோடில் தங்க நகைக்கடைகள் அதிகம். சரவணா, ஜி.ஆர்.டி, ஓ.கே.ஜெ, ஜாய் அலுக்காஸ், தனிஷ்க், பாத்திமா, கசானா என்று பெரிய பெரிய நகைக் கடைகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அவர்களும் தங்கள் கடைகளை அடுக்கு மாடிகளாக அடுக்கிக் கொண்டே தான் செல்கிறார்கள். சரவணா, போத்திஸ், சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி, நல்லி, குமரன் சில்க்ஸ் போன்ற ஜவுளிக் கடல்களும் இங்கே தான் ஒருவருக்கொருவர் போட்டியாய் அணிவகுத்து நிற்கிறார்கள். ஒரே ஒரு உபரி தகவல் இந்த 'எடுத்துக்கோ எடுத்துக்கோ' கடையில் மட்டும் இலவசமாக கொடுத்தால் கூட எதையும் எடுத்து விடாதீர்கள் காரணம் இங்கே பொருட்களின் விலையும் குறைவு தரமும் குறைவு. இவ்வளவு பெரிய பெரிய கடைகளுக்கு நடுவில் இருக்கும் சாலை வெகுவாக சுருங்கி விட்டதால் வாகன நெரிசலும் ஜன நெருக்கடியும் எப்போதுமே ஜெகஜோதியாய் இருக்கும்.

ந்த இரண்டு தெருக்களையும் சுற்றிவிட்டு பாண்டி பஜார் சென்றால் அங்கே பெண்களுக்கான அணிகலன்கள் மொத்தமும் விதவிதமாக அணிவகுத்து நிற்கும். அழகழகான வாட்சுகள், கம்மல்கள், வளையல்கள், கள்,கள் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

சாதாரண மற்றும் விடுமுறை நாட்களில் இருக்கும் கூட்டத்தைக் காட்டிலும் விழாக் காலங்களில் கூட்டம் பலமடங்கு அதிகமாக இருக்கும். காரணம் சென்னை மட்டுமில்லாமல் வெளிமாவட்டங்களில் இருந்தும் மக்கள் அதிகளவில் வருகை புரிவார்கள். இவ்வளவு கூட்டத்தையும் சமாளிக்கும் அளவிற்கு திநகரில் உணவகங்கள் கிடையாது. இங்கு உணவகங்கள் அதிகம் தான் என்றாலும் பண்டிகை தினங்களில் இருக்கும் கூட்டத்துடன் ஒப்பிடும் பொழுது சொற்பமாகவே தெரியும். அதனால் பண்டிகை நாட்களில் இங்கு வருமுன் உணவை முடித்துவிட்டு வருவது நல்லது இல்லையேல் மறந்துவிட்டு வருவது நல்லது.

டுத்த இடம் ரிட்சி ஸ்ட்ரீட் அல்லது ரிச் ஸ்ட்ரீட். கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், செல்போன், செல்போன் உதிரி பாகங்களிலிருந்து பெயர் தெரிந்த தெரியாத என்னென்ன எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்க வேண்டுமானாலும் இந்த எலெக்ட்ரானிக் சந்தைக்கு வந்துவிடலாம். ஹார்ட் டிஸ்க், மதர் போர்ட் தொடங்கி கம்ப்யூட்டரின் அணைத்து உதிரிபாகங்களையும் பிளாட்பாரத்தில் கடை பரப்பி வைத்திருப்பதைப் பார்த்தல் கொஞ்சம் திகிலூட்டும். காரணம் அனைத்தும் திருட்டுப் பொருட்கள். சென்னையின் வீடுகளில் இருக்கும்  எலெக்ட்ரானிக் பொருட்களில் குறைந்தது ஒரு பொருளாவது இங்கிருந்து வாங்கப்பட்டதாகதான் இருக்கும். அண்ணா சாலையின் ஆரம்பத்திலேயே இருக்கும் இந்தத் தெருவிற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் சூட்டிய பெயர் நரசிங்கபுரம் தெரு. இந்தத் தெருவிற்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே சென்னையில் பலருக்கு தெரியாது. 

ங்கநாதன் தெருவிற்கு அடுத்தபடியாக மிக மிக நெரிசலான குறுகலான கூட்டம் அதிகம் இருக்கும் இடம் ரிச் ஸ்ட்ரீட் தான். ஒரே ஒரு வித்தியாசம் இங்கு ஆண்களை மட்டுமே அதிகம் காண முடியும். பெண்கள் இங்கு தனியாக செல்வது அவ்வளவு நல்லதும் இல்லை. இங்கு போலிகள் அதிகம் என்பதால் ஏமாறாமல் பொருட்களை வாங்குவது உங்கள் சாமர்த்தியம். இந்த இடத்தைப் பற்றியோ அல்லது வாங்கப் போகும் பொருளைப் பற்றியோ முழுவதுமாக அறிந்த்தவரை உடன் அழைத்துச் சென்றால் அடுத்த முறை ரிச் ஸ்ட்ரீட் வருவதற்கு நீங்கள் தயங்கமாட்டீர்கள். (நட்டு போல்ட் கார்டு ரீடர், ரிமோட் வாங்க செல்பவர்களுக்கு இது பொருந்தாது). பல எலெக்ட்ரானிக் பொருட்களின் சர்வீஸ் சென்டரும் இங்கு உண்டு. 

ந்த படிப்பிற்கு, எந்த துறைக்கு, எந்த ஆத்தர் எழுதிய புத்தகம் வாங்க வேண்டுமானாலும் நாம் செல்ல வேண்டிய ஒரே இடம் சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திற்கு அடுத்த கட்டிடமாக இருக்கும் மூர் மார்கெட். ஐஐடி புத்தகங்களிலிருந்து டிஐ புத்தகம் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதால் இளைஞர்களின் கூட்டம் அலைமோதும். இங்கு கிடைக்காத புத்தகங்களே இல்லை. பழைய புதிய பாடப் புத்தகங்களுக்கு என்றே தனிதனிக் கடைகள் இங்கு உண்டு. பழைய வார மாத இதழ்களும் கிடைக்கும். 

குறிப்பிட்ட பாடப் புத்தகத்திற்கு எந்தெந்த ஆத்தர்கள் புத்தகங்கள் எழுதயுள்ளர்கள், அவற்றில் எந்த ஆத்தர் எழுதிய புத்தகம் சிறப்பாக இருக்கும் என்பன போன்ற பல விசயங்களை தங்கள் நா நுனியில் வைத்திருப்பார்கள். புத்தகம் பற்றிய தகவல்கள் அனைத்தும் ஆறு வயது சிறுவனிலிருந்து அறுபது கிழவர் வரை அறிந்து வைத்திருப்பது ஆச்சரியம் என்றால், இவர்களுக்கு குறைந்தபட்ச படிப்பறிவு கூட கிடையாது என்பது அதிசியமான விஷயம். உங்களுக்கு சென்னை பாஷை பேசத் தெரிந்திருந்ததால் புத்தகத்தை பேரம் பேசி மிகக் குறைந்த விலைக்குக் கூட வாங்கலாம். இங்கே வண்ண வண்ண மீன்களும், மீன் தொட்டிகளும், மீன் வளர்ப்பு சார்ந்த பொருட்களும் விற்பனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.   

மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகே இருக்கும் பாரதியார் சாலை முழுவதிலும் புத்தகக் கடைகள் தான், ஆனால் இங்கே பாடப் புத்தகளை விட பழைய புதிய கதைப் புத்தகங்கள் அதிகம். கொஞ்சம் நேரமெடுத்து தேடினால் பல அரிய பழைய புத்தகங்கள் சிக்கும். பொழுது போகவில்லை என்றால் மெரினா செல்வதை விட இங்கு வருவது மிகவும் பிடிக்கும்.பாண்டி பஜாரிலும் புத்தகக் கடைகள் உண்டு. அங்கு பெரும்பாலும் உலகப் புகழ்பெற்ற ஆங்கிலப் புத்தகங்களே கிடைக்கும். 

ன்று வந்த புதிய படத்திலிருந்து எப்போதோ வந்த பழைய படங்கள் வரை எந்த மொழி திரைப்படம் வாங்க வேண்டுமென்றாலும் பீச் ஸ்டேஷன் என்றழைகப்படும் சென்னை கடற்கரை ரயில் நிலையம் வாசலில் இருக்கும் பர்மா பஜார் உங்களை இருகரம் பிடித்து வலுக்கட்டாயமாக வரவேற்கும் இல்லை வலுகட்டாயமாக இழுத்து வரவேற்பார்கள். அருகில் ஹார்பர் உள்ள காரணத்தினால் கஸ்டம்சில் சிக்கும் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் மிக மிக குறைந்த விலையில் இங்கு கிடைக்கும். அதற்க்கு இந்த ஏரியாவில் ஆட்பழக்கம் அதிகம் வேண்டும். அதனால் இந்த ஏரியாவிற்கு கள்ளச் சந்தை கஸ்டம்ஸ் சந்தை என்றும் பல பெயர்கள் உண்டு. 

நீங்கள் கள்ளத்தனமாக வாங்கும் அப்பொருட்களின் ஆயுட்காலம் உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தே உள்ளது. இந்தியாவில் முறைப்படி ஐ-பாட் விற்பனைக்கு வருமுன்பே இங்கு வந்துவிட்டது என்பது ஆப்பிள் அறிந்த விஷயம். பர்மா பஜார் பற்றி லக்கிலுக் யுவகிருஷ்ணா எழுதி இருக்கும் அழிக்கப் பிறந்த்தவன் நாவலில் இருந்து அதிக விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை. இந்த இடத்திற்கு இந்தப் பெயர் சாலப்பொருந்தும். காரணம் பழைய ஸ்கூட்டரை கொண்டு சென்றால் அதை புதிய நான்கு சக்கர வாகனமாகவே மாற்றித் தரும் அளவிற்கு திறமை வாய்ந்த மெக்கானிக்குகள் இங்கு உண்டு. இங்கிருக்கும் எல்லா மெக்கானிக்குகளும் எல்லா காரையும் பார்ப்பது இல்லை. போர்ட் என்றால் நம்பி, அம்பாசிடர் என்றால் கரீம் பாய், என்று ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒரு திறமையான மெக்கானிக் உள்ளார். இருசக்கர வாகனத்தை பிரித்து மேய்வதில் இவர்களை விட்டால் வேறு ஆள் இல்லை எனலாம். சமீபத்தில் புதுபேட்டைக்குச் சென்றிருந்த பொழுது ஒரு விளம்பரம் என்னை ஆச்சரியப் பட வைத்தது என்பதை விட அதிர்சிக்குள்ளாக்கியது. இதுதான் அந்த விளம்பரம், "இங்கு BENZ BMW AUDI கார்களுக்கு சர்விஸ் செய்யப்படும், உதிரி பாகங்கள் கிடைக்கும்".   

காய்கறி வாங்க கோயம்பேடு  மார்க்கெட், fresh fish வாங்க எண்ணூர், மதுரவாயல் மார்கெட். மளிகை சாமான்கள் வாங்க பாரிஸ், மூக்குக் கண்ணாடி, கல்யாண பத்திரிக்கை,  எழுதும் நோட்டு, பட்டாசு, வாங்க BROADWAY. என்று ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு ஏரியாவை பிரித்து அழகு பார்க்கிறது சென்னை.
நன்றி !
 seenuguru.com

Monday, May 25, 2015

வீட்டுக் கடன் வாங்க திட்டமிடுகிறீர்களா? உங்கள் சந்தேகங்களுக்கான விடைகள் இதோ !

சொந்த வீடு வாங்குவது ஒவ்வொரு இந்தியனின் கனவாகும். நம்மில் பலருக்கு சொந்தப் பணத்தில் வீடு வாங்குவது இயலாத காரியம். எனவே நாம் கடன் வாங்க வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களை நாடிச் செல்கிறோம். (A comparison of the cheapest home loan rates in India) இது போன்ற சமயங்களில் நீங்கள் தகுதி அளவுகோல்கள், வட்டி விகிதம் (நிரந்தர அல்லது மாறக்கூடிய வகை), கட்டணங்கள் பற்றிய விவரங்கள், தேவையான ஆவணங்கள் பற்றி அறிய விரும்பலாம். உங்களுக்கு பல கேள்விகள் தோன்றலாம் இதோ, வீட்டுக்கடன் பற்றி சாதாரணமாகக் கேட்கப்படும் சில கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே உள்ளன. 
வீட்டுக் கடன் பெற தேவையான தகுதிகள் என்ன? 
 கடனைத் திருப்பிச் செலுத்தும் உங்கள் திறன் மீதான வங்கியின் மதிப்பீடு உங்களது கடன் பெறும் தகுதியை தீர்மானிக்கிறது. வங்கிகளால் கருத்தில் கொள்ளப்படும் சில முக்கிய காரணிகள்: 
* மாத வருமானம். 
* குடும்ப செலவுகள் மற்றும் நிகர வருமானம். 
* சொத்துக்கள் மற்றும் கடன்கள். 
* கடன் வரலாறு. 
* நீங்கள் வாங்க இருக்கும் சொத்தின் மதிப்பு. 
வீட்டுக்கடன் மீதான வட்டியை வங்கிகள் எப்போது வசூலிக்கத் தொடங்குகின்றன? 
வங்கிகள் கடன் பட்டுவாடா செய்த நாள் துவங்கி வட்டி வசூலிக்கத் தொடங்குகின்றன. கடன் ஒப்புதல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டி விகிதம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பொருந்தும். அதன் பின் வட்டி விகிதத்தில் மாற்றம் இருப்பின் அது செயல்படுத்தப்படும். ஒப்புதல் தரப்பட்டு பட்டுவாடா செய்யப்படாத கடன்கள் மீது வங்கிகள் வட்டி வசூலிப்பதில்லை. 
 வட்டி விகிதங்கள் மாறும் போது வங்கிகள் அதைத் தெரிவிக்க வேண்டுமா? 
ஆம். உங்களது வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் இருந்தால் வங்கிகள் உங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் 

நிலையான வட்டி விகிதம் என்றால் என்ன? 
 கடன் காலம் முழுமைக்குமான வட்டி விகிதம் மாறாமல் இருக்கும் அல்லது கடன் வாங்கிய சில வருடங்கள் கழித்து மறுமதிப்பீடு செய்யப்படலாம். இது உங்கள் கடன் விதிமுறைகளுக்கு உட்பட்டது. நீங்கள் கடன் பெறும் சமயத்தில் வட்டி விகிதம் குறைவானதாக இருந்தால் இந்த முறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எதிர்காலத்தில் சந்தையில் வட்டி விகிதம் அதிகரித்தாலும் உங்கள் கடன் மீதான வட்டி விகிதம் நிலையானதாக இருக்கும். 
மாறத்தக்க வட்டி விகிதம் என்றால் என்ன? 
  இங்கு வட்டி விகிதம் நிலையானதல்ல, வங்கிகளால் மாற்றத்தக்கது. இந்த விகித மாற்றம் வங்கிகளால் குறிப்பிடப்படும் பிரதான கடன் வழங்கும் விகிதத்துடன் தொடர்புடையது. இந்த விகிதம் உயர்ந்தால் வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதமும் மாதத் தவணையும் உயரும். இது குறைந்தால் வட்டியும் குறையும். 
எல்லா மாதமும் குறையும் வகையில் வட்டி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?  
உங்கள் மாதத் தவணையின் ஒரு பகுதி கடன் முதலில் இருந்து கழிக்கப்படுகிறது. கழிக்கப்பட்ட முதல் மீதே அடுத்த மாதத்திற்கான வட்டி கணக்கிடப்படுகிறது. குறிப்பிட காலம் கடன் மீதான தவணைகள் செலுத்தப்பட்ட பின் தவணையில் வட்டிப்பகுதி குறைந்து முதல் பகுதி அதிகரிக்கிறது. 
கடன் பெறப் பொருந்தும் கட்டணங்கள் யாவை? 
பொதுவாக வங்கிகள் கீழ்கண்ட கட்டணங்களை விதிக்கின்றன 
 * கடன் விண்ணப்பத்தை செயல்படுத்த. 
 * ஆவணங்கள் தயாரிக்க. 
 * தாமதமான தவணைகளுக்கு. 
 * கடன் காலத்தில் வேறு கடன் திட்டங்களுக்கு மாறும்போது. 
 * கடனை முழுமையாகவோ அல்லது கடனின் ஒரு பகுதியையோ        முன்கூட்டியே திருப்பி செலுத்தும் போது. 
 * கடனை மறுசீரமைக்கும் போது. 
 * வட்டி விகிதத்தை நிலையானதிலிருந்து மாறத்தக்க விகிதமாக மாற்றும்போது அல்லது மாறத்தக்க விகிதத்திலிருந்து நிலையானதாக மாற்றும்போது. 
வங்கிகளால் வசூலிக்கப்படும் பிற கட்டணங்கள்: 
 * சட்ட வேலைகளுக்கான கட்டணம். 
 * தொழில்நுட்ப ஆய்வுக்கான கட்டணம். 
 * வருடாந்தர சேவை வரி. 
 * ஆவணங்கள் திருப்புதலுக்கான கட்டணம்.

Thanks :  
http://tamil.goodreturns.in/

Sunday, May 24, 2015

பணம் கொட்டும் தொழில்கள்: நான்-ஓவன் தயாரிப்புகள் !

இந்தத் தொழிலுக்கு போட்டி இல்லை என்பது பெரிய ப்ளஸ்பாயின்டாக உள்ளது!
ப்ளாஸ்டிக் பொருட்களின் மீதான விழிப்பு உணர்வு அதிகரித்துவரும் சூழலில், நான்-ஓவன் தயாரிப்புகள்தான் அந்த இடத்தைப் பிடித்துவருகிறது. கேரி பேக் முதல் பலவிதமான பொருட்களை இதன் மூலம் உருவாக்க முடியும். ப்ளாஸ்டிக்கைபோல இலகுவானது, உறுதியானது; அதேசமயம், காகிதப்பை போல காற்று, நீர்புகும் தன்மை கொண்டது. மறுசுழற்சி கொண்டது என்பதால் இப்போது அனைத்துத் தேவை களுக்கும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்த நான்-ஓவன் மூலம் கேரிபேக், தாம்பூலப்பை தவிர, தலையணை உறை, சீட்கவர், கம்ப்யூட்டர் கவர், மாஸ்க், ஏப்ரான், கிளவ்ஸ் போன்ற பலவகைகளில் பொருட்களை செய்யமுடியும். தற்போது மெடிக்கல் சென்டர்களில் ஸ்கேன் ரிப்போர்ட் கவர், ட்ராவல்ஸ் நிறுவனங்களில் சீட் கவர் போன்றவை இந்த நான்-ஓவன் மெட்டீரியல்களுக்கு வந்துவிட்டன. வழக்கமாக ஒரே தயாரிப்பாக இல்லாமல், புதிய புதிய டிசைன்களில் முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவு என்பதால் வருமானத்துக்கு பஞ்சமிருக்காது.

ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகைகள் உள்ளன. செமி ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் மூலம் குறிப்பிட்ட வகைகள் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும் என்பதால், நாம்  ஆட்டோமேட்டிக் இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யும் திட்டத்தைப் பார்ப்போம்.

திட்ட அறிக்கை!
முதலீடு விவரம் ( )
வாடகை: அந்தந்தப் பகுதி நிலவரப்படி
இயந்திரங்கள் : 31,97,249
இதில் கட்டிங் மெஷின், ஸ்லிட்டிங் மெஷின், ப்ரின்டிங் மெஷின், கம்ப்ரஸர், ஸ்டெபிலைஸர் என அனைத்து இயந்திரங்களும் அடக்கம்.
நமது பங்கு 5% = 1,59,862
மானியம் 25% = 7,99,312
வங்கிக் கடன் 70% = 22,38,075
(அ) ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள்.ஒருநாளின் ஒரு ஷிப்டுக்கு 350 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு தேவையான நான்-ஓவன் பேப்ரிக் ரோல் ஒரு கிலோ 150 ரூபாய். பலவித கலர்களில், அழுத்தங்களில் (ஜி.எஸ்.எம்) வாங்கிக்கொள்ளலாம். (350X150X25 = 13,12,500)

போட்டிகள் இல்லை!
ஜோதிலட்சுமி, உரிமையாளர்,
சென்னை நான்-ஓவன், போரூர், சென்னை.
”இந்தத் தொழிலில் தொடக்கத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், நாளடைவில் தொழிலின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டேன். வாடிக்கையாளர்கள் தரும் ஆர்டர்களுக்கு மட்டும் வேலை பார்க்காமல் நமது டிசைன்களும் வித்தியாசமாக இருந்தால், நாமே நேரடியாக விற்பனையிலும் இறங்கலாம்.  மூலப்பொருள் வேஸ்ட் இல்லாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். நம்பகமான, பணியாளர்கள் இருந்தால் லாபம் நிச்சயம். இப்போதைக்கு இந்தத் தொழிலில் போட்டிகள் இல்லை என்பதும் எங்களைத் தேடிவர வைக்கிறது.”

Thanks :

கம்பீரமான வருமானம் தரும் கால்மிதி தயாரிப்பு பிசினஸ் !

வாழ்க்கையின் சிக்கல்களை சவால்களாக்கி, இன்னல்களை எல்லாம் இனிதானவையாக்கிக் காட்டுவாள் பெண். அதற்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு… கால்மிதி பிசினஸில் கலக்கிக்கொண்டிருக்கும், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, இந்து.
நான்காம் வகுப்பு படிக்கும் மகன், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் கணவர் என்று அழகான குடும்பத்தில் இருந்துகொண்டு, தொழிலில் அதிவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் இந்து!
”ஆழம் தெரியாம காலைவிட்ட கதைதான் என்னோட கதை. வாழ்க்கையில நான் செஞ்ச மிகப்பெரிய தவறு, ஒரு விஷயத்தைப் பத்தி தெரியாம அதுல இறங்கினதுதான். என் வாழ்க்கையில நான் செஞ்ச சரியான விஷயமும் அதுதான்!”
- இப்படி வித்தியாசமாக இந்து கொடுத்த அறிமுகம், அவரை மேலும் உற்றுநோக்க வைத்தது!

”ஒருநாள் எதேச்சையா என் தோழிகூட சேர்ந்து, சின்னாளப்பட்டி போயிருந்தேன். அங்க கால்மிதி செய்யுற தறியைப் பார்த்தேன். உடனே கால்மிதி பிசினஸ் எனக்கு ஆசை கொடுக்க, அதைப் பத்தி எந்த விவரமும் தெரியாமலேயே, அதில் இறங்க முடிவெடுத்தேன். என் தம்பி கொடுத்த 15 ஆயிரம் ரூபாயோட, கூட்டுறவு வங்கியில கடன் வாங்கி, ரெண்டு தறிகள் வாங்க காசை கட்டினேன்.
மகளிர் சுயஉதவிக் குழு பெண்களை வெச்சி வேலை பார்க்கலாம்ங்கிற எண்ணத்துல, கால்மிதி செய்யுற இடத்துக்கே கூட்டிட்டுப் போய் காட்டினேன். ரொம்ப நம்பிக்கையா பேசினவங்க, தறி இயந்திரம் என் வீட்டுக்கு வந்து இறங்கின பிறகு, ‘இவ்வளவு பெரிய மெஷின்ல எல்லாம் நம்மளால வேலை செய்ய முடியாதுப்பா!’னு எதிர்மறையா பேசினாங்க. தொழிலை எடுத்துச் செலுத்த முடியாம, வாங்குன தறி இயந்திரங்களை ஈரோட்டுல தறி பிசினஸ் செய்ற வாசுதேவன் சாருக்கு பாதி விலைக்கு வித்துட்டேன்” என்று சொல்லி, சற்றே இடைவெளி கொடுத்தார் இந்து.
தொடர்ந்தவர், ‘இனி என்ன செய்யுறது?’னு முழிச்சிட்டு நின்னப்போ, ஒரு ஐடியா தோணுச்சு. வாசுதேவன் சாரையே கட்டணம் கொடுத்து எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து, தறிகளை எப்படி இயக்கணும், கால்மிதிகள் எப்படி தயாரிக்கணும்னு நானும், வேலைக்காக புதுசா நான் சேர்த்துக்கிட்ட பெண்களும் கத்துக்கிட்டோம். ஒரு தெளிவு கிடைச்சது. மறுபடியும் அவர்கிட்டயே தறிகளை வாங்கி, தொழிலைத் தொடங்கினேன்.

தொழில் ஒரு பக்கம் பிக்கப் ஆக, கால்மிதி தொழில் பயிற்சிகளும் கொடுக்க ஆரம்பிச்சேன். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 6 நாளுக்கு 6,000 ரூபாய் கட்டணத்திலும், தனி நபர்களுக்கு ஒரு நாளுக்கு 500 ரூபாய் கட்டணத்திலும் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இடையில வேலை சரியா செய்யத் தெரியாத பணியாட்களால நஷ்டம் வர ஆரம்பிச்சது. உடம்பும் சரியில்லாம போச்சு. சுத்தியிருந்தவங்கள்ல பலரும் அவநம்பிக்கையா பேசி, தொழிலைக் கைவிடச் சொன்னாங்க. ‘எதுவாயிருந்தாலும் ஒரு கை பார்த்துடலாம்’னு துணிஞ்சி பல தடைகளைத் தாண்டினேன். தொழிலோட நெளிவு சுளிவு, லாப நஷ்டம் எல்லாத்தையும் அடிபட்டு அடிபட்டே கத்துக்கிட்டேன்.
ஒரு யூனிட் வெச்சி பிசினஸை ஆரம்பிச்ச எங்கிட்ட, இப்போ மூணு யூனிட் இருக்கு. இந்த வளர்ச்சிக்கு இடையே அத்தனை தடைகள், கஷ்டங்களையும் தனியாளா நின்னு சந்திக்க வேண்டிய கட்டாயங்கள் நிறைய இடத்துல ஏற்பட்டது. அம்மாவும், தம்பியும் என் மேல இருக்குற நம்பிக்கையை என்னிக்கும் இழந்ததே இல்ல. என் கணவரும் அத்தையும் கொடுத்த சுதந்திரம், தெரியாத விஷயத்தைக்கூட தைரியமா இறங்கிக் கத்துக்கலாம்னு துணிச்சலைக் கொடுத்துச்சி. இவங்க எல்லாரும்தான் இந்த வெற்றிகிட்ட என்னை தள்ளிவிட்டிருக்காங்க!” என்று பெருமை பொங்கச் சொல்லும் இந்துவிடம் வேலை செய்பவர்கள் அனைவருமே இல்லத்தரசிகள். அவர்கள், சுற்றுவட்டாரப் பகுதியினர் என்பதால் குழந்தைகளையும் கூடவே அழைத்து வந்துவிடுகின்றனர். இதனால் ‘மகளிர் மட்டும்’ எஃபெக்ட் கொண்டு தடதடக்கிறது இவரின் தறிகள்!
கால்மிதி தயாரிப்பு மற்றும் வருமானம் பற்றி பேசிய இந்து, ”இப்போ பருத்தி, பனியன் துணி, மெல்லிய துணினு மூணு வகையான கால்மிதிகளைத் தயாரிக்கிறேன். ஈரோடு, மதுரை, திண்டுக்கல், காரைக்குடினு கால்மிதிகளைத் தயாரிச்சு அனுப்புறேன். கோவில்பட்டி, காரைக்குடி, நெல்லை, மணப்பாறைனு பல இடங்கள்ல நான் போட்டுக் கொடுத்த தறிகளும் இயங்கிட்டு இருக்கு.
கால்மிதி செய்ய தறியில் நூல் கோக்கறதுக்கு ஒண்ணரை மணி நேரம் ஆகும். ஓரிடத்துல தப்பு வந்துட்டாகூட மொத்தமும் பாழாகி, ஒரு கால்மிதிகூட செய்ய முடியாம போகலாம். அந்த லாகவம் கை வந்துட்டா, கால்மிதி செய்யுறதுங்கிறது 10 நிமிஷ வேலைதான்.
இப்போ எங்கிட்ட 9 தறிகள் இருக்கு. சரியான ஆட்களா தேர்ந்தெடுத்து முறையா வேலை வாங்கினா… ஒரு தறியில எப்படியும் குறைந்தது மாசத்துக்கு 1,000 கால்மிதிகள் செய்யலாம். 9 தறியிலயும் 9,000 கால்மிதிகள் கிடைக்கும். ஒரு கால்மிதி 40 ரூபாய்னு விக்கலாம். 9,000 கால்மிதிகளுக்கு 3,60,000 மாசத்துக்கு வியாபாரம் ஆகும். கணிசமான லாபம் பார்க்கலாம். ஆர்டர் கொடுக்கற கம்பெனிகள் எல்லாமே அதிக எண்ணிக்கையிலதான் கேட்பாங்க. அதனால நம்பிக்கையா கால்மிதி பிசினஸில் கால் வைக்கலாம்!”
- கடகட தறி சத்தங்களுக்கு இடையே கம்பீரமாக சொன்னார்!

 Thanks :
 Aval Vikatan

Saturday, May 23, 2015

பிசினஸ் தொடங்கும்முன்… தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! !

நீங்கள் ஏதேனும் ஒரு துறையில் தொழில் தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? பொதுவாக, ஒரு தொழிலை தொடங்கும்போது அதுபற்றி நன்கு ஆராய்ந்தபிறகே தொடங்குவது வழக்கம். ஆனாலும், நாம் சில தவறுகளைச் செய்துவிட வாய்ப்பு உண்டு. இதனால் நாம் பெரிய அளவில் பணத்தை இழக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாவோம். எனவே, தொழில் தொடங்கும்முன் ஒருவர் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் பற்றி சென்னை ஐஐடி-யின் மேலாண்மைத் துறை பேராசிரியர்
தில்லைராஜனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

1, ஒருவர் ஒரு தொழிலை தொடங்கி நடத்தும்போது அதில் முழுக்கவனத்தையும் செலுத்தாமல் போவதினால், அடுத்தடுத்து தவறு செய்து, பெரிய அளவில் கையைச் சுட்டுக்கொள்வதற்கு வாய்ப்புண்டு. தொழில் செய்வது அலுவலகத்தில் வேலை பார்க்கிறமாதிரி அல்ல. தொழிலுக்காக முழுநேரத்தையும், உழைப்பையும் தந்தால் மட்டுமே அதில் ஜெயிக்க முடியும்.
 
2, பணம் இருக்கிறது அல்லது பணம் கடனாகக் கிடைக்கிறது. அதனால் தொழில் தொடங்க லாமே என்று நினைப்பது தவறு. ஒரு தொழிலைத் தொடங்கும்முன் அந்தத் தொழிலின் மீதுள்ள ஆர்வம், அனுபவம், பலம் பற்றி தெரிந்துகொண்டு ஆரம்பிப்பது நல்லது.


3   முழுநேர தொழிலா அல்லது பகுதிநேர தொழிலா என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தொழில் தொடங்குவது தவறு. முழுநேர தொழிலாக இருந்தால், அதற்குத் தேவையான நேரத்தையும் நிதியையும் ஒதுக்கவேண்டும். இல்லையெனில், அது உங்கள் வருவாயை சமாளிக்க உதவும் ஒரு பகுதிநேர தொழிலாக இருக்குமே தவிர, அது உங்களை வளர்ச்சியடையச் செய்யும் தொழிலாக இருக்காது.

4, ஆரம்பத்தில் நிறையப் பணியாளர்களையோ அல்லது உயர்பதவிகளுக்கான ஆட்களையோ நியமிக்கும்போது சரியான விகிதத்தில் நியமிப்பது அவசியம். இந்த விகிதம் அதிகமாகும்போது, சம்பளத்துக்காகவே ஒருபகுதி தொகையைச் செலவழிக்க வேண்டியிருக்கும். எனவே, இந்த விஷயத்தில் அதிகக் கவனத்துடன் இருப்பது அவசியம். உங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு அதிக தொகையைச் சம்பளமாக வழங்காமல், குறிப்பிட்ட தொகைக்குப் பதில் பங்குகளாகத் தரும்போது பொறுப்பு அதிகரிக்கும். நிறுவனத்துக்குச் செலவும் குறையும்.

5. ஒருவரைப் பணியில் அமர்த்தும் போது அவரால் 1:5 என்ற விகிதத்தில் தொழிலுக்கு வர்த்தகம் வந்து சேரவேண்டும். அதாவது, ஒருவருக்கு ஒருபங்கு சம்பளம் வழங்கினால், அவரால் தொழிலுக்கு 5. பங்கு வர்த்தகம் வந்து சேரவேண்டும். இது தவறும்போது தொழிலில் சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சேவைத் துறையில் இந்த 1:5 விகிதம் கட்டாயம் இருக்க வேண்டும்.
 
6.உறவினரையோ அல்லது நண்பரையோ பங்குதாரராகச் சேர்க்கும்போது, அவருக்குப் பங்குகளை வழங்குவதில் கவனமாக இருக்க வேண்டும். சில சமயங்களில் அவர்களது பங்களிப்பு குறைவாக இருந்தும், குறைவான பங்குகளை வைத்திருக்கும் ஒரு பங்குதாரரின் பங்களிப்பு அதிகமாகும்போது தேவையற்ற அதிருப்தியான சூழல் உருவாகும். இந்தத் தவறை ஆரம்பத்திலேயே தவிர்ப்பது நல்லது.

7. மதிப்பிடலில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். நம் தொழிலின் மீதுள்ள அதிக நம்பிக்கையினால், நம் தொழிலின் மதிப்பை அதிகமாக நிர்ணயிப்பது தவறு. அனுபவம் வாய்ந்த தொழில்முனைவோர்கள் அதை எளிதில் கண்டுபிடித்து, நம் தொழிலில் முதலீடு செய்யாமலே போய்விடுவார்கள். எனவே, சரியான மதிப்பை நிர்ணயித்தால்தான் மற்றவர்கள் நமது தொழிலில் முதலீடு செய்ய முடியும்!

8. வர்த்தகத்தில் எப்போதும் ஒரு மாற்றுத் திட்டம் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த மாற்றுத் திட்டத்தை ‘பிளான் பி’ என்பார்கள். சிலர் ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே நம்பி இருப்பார்கள். அது தவறு. ஏதோ ஒரு காரணத்தினால் அந்தத் திட்டம் செயல்படாமல் போகும்போது, பிளான் பி கைகொடுக்கும்.

9. மார்க்கெட் பற்றிய ஆராய்ச்சியும், துறை சார்ந்த அறிவும் அவசியம் தேவை.  இல்லையெனில் சரியான நேரத்தில், சரியான வாடிக்கையாளரை சென்றடைய முடியாமல் போய்விடும். மார்க்கெட் ஆராய்ச்சியும், துறை சார்ந்த அறிவும் இருந்தால்தான் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதையும் கணிக்க முடியும்.

10. ஆரம்பத்தில் விளம்பரங் களுக்கு அதிகம் செலவு செய்யவேண்டியிருந் தாலும், இது ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டாமல் இருக்க வேண்டும். ஒருவேளை உங்கள் தொழில் சரியாக நடக்கவில்லையெனில், விளம்பரத்துக் காகச் செலவழிக்கப்பட்ட பணம் வீணாகாமல் இருக்கவே, இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

நன்றி :

நத்தம் வாங்க ! மொத்தமாக சட்டைகள் வாங்கி விற்பனை செய்லாம் !

திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் 32 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நத்தம். இங்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் சட்டைகள் தயார் செய்யப்படுகின்றது. ஒரே மாதிரியான சட்டைகள் எடுக்கவேண்டும் என்று விரும்பும் கல்லூரி மாணவர்களாகட்டும், திருமணம் போன்ற விசேஷங்களுக்கு விலை மலிவாகவும் அதேசமயம் தரமானதாகவும் சட்டைகளை வாங்க நினைப்பவர்களாகட்டும், அனைவருக்கும் ஒரே 'சாய்ஸ்’ நத்தம்தான்.
இங்குள்ள சென்ட்ரல் சினிமா வீதியில் இருபதுக்கும் மேற்பட்ட கடைகள் மொத்தமாக சட்டைகளை தயாரித்து விற்கின்றன. நத்தம் முழுவதும் ஆங்காங்கே குடிசைத் தொழிலாகச் செய்யப்பட்டு வரும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கடைகள் இருக்கின்றன.  குறைந்தபட்சம் ரூபாய் 65-ல் தொடங்கி பையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப சட்டைகள் இங்கு கிடைக்கின்றன. இதுபற்றி தனியார் கடை உரிமையாளர் அஜ்மலிடம் பேசினோம்.
'இங்கு விலை மலிவாக கிடைக்க காரணம், எங்களிடம் உற்பத்தி அதிகம். மும்பை, சூரத் மதுரை போன்ற ஊர்கள்ல இருந்து துணிகளை வாங்குறோம். அப்புறம் டெய்லர் முதல் அயர்னிங் வரை எல்லாத்திற்கும் ஆட்கள் போட்டு வேலை செய்றோம்.
பெரிய ஊர்களில் உள்ள கடைகள், துணிகளை வாங்கி எங்களை மாதிரி உள்ளவங்ககிட்ட தைக்க ஆர்டர் கொடுப்பாங்க. அதுக்குன்னு தனியா அமவுன்ட் கொடுக்கணும். அப்புறம்  டிரான்ஸ்போர்ட், ஏஜென்ட்ஸ், விளம்பரங்கள் தாண்டி சேல்ஸ் வரும்போது எல்லாச் செலவையும் ஈடுசெய்ய அதை துணிகளோட விலையில் சேத்துருவாங்க. ஆனா, நாங்க விளம்பரம், ஏஜென்டுகளுக்குப் பணம் செலவு செய்றதில்லை. அதனாலதான் நாங்க விலை கம்மியா குடுக்க முடியுது' என்று தொழில்நுணுக்கம் சொல்லித் தந்தார்.
இங்கு டெய்லராக இருக்கும் முருகனிடம் பேசினோம். 'இந்த தொழிலுக்குன்னு தனியா சங்கமோ, தலைவர்களோ கிடையாது 80% கூலியாட்கள்தான் வேலை பார்த்துகிட்டுவர்றாங்க, இங்குள்ள கடை முதலாளிகள்கூட 50% உழைப்பாளிகள்தான். பாம்பே காட்டன், செஞ்சூரி, நெப்சி கதர், பிளைன் அய்டம்ஸ், ஈரோடு காட்டன், மெஜுராகோட்ஸ், டி.சி. கிளாத் துணிகள்னு நிறைய வெரைட்டியான துணிகளை இறக்குமதி செய்யுறாங்க. அப்புறம் சில்ட்ரன்ஸ் ஷர்ட், ஷார்ட் ஷர்ட், பார்மல்ஸ், ஒய்ட் ஷர்ட், பேட்டர்ன் ஷர்ட்னு தைத்து தமிழ்நாடு முழுக்க  ஏற்றுமதி பண்றோம். அப்பப்ப வர்ற 'டிரண்ட்’டுக்கு ஏத்த மாதிரி பல சட்டைகளையும் இங்கே தைக்கிறோம்'என்றார் அவர்.
இங்கிருந்து வெளியூர்களுக்கு வாங்கிச் செல்லும் சட்டைகள் 40% லாபம் வைத்து விற்கப்படுகிறதாம். தயாராக இருக்கும் சட்டைகளை வாங்கிச் செல்வதோடு, சட்டைகளை ஆர்டர் தந்தும் வாங்கிச் செல்லலாம். நீங்கள் விரும்பிய டிசைன்களையும், கலர்களையும், துணியின் தரத்தையும் நீங்களே தேர்வு செய்வதற்கான வசதியும் இங்கே இருக்கிறது.
பிரபலமான பிராண்ட் தயாரிப்புகளுக்கு நிகராக, ஆனால் குறைவான விலையில் தருவதே இந்த ஊரின் தனிச் சிறப்பு. இனி மதுரை, திண்டுக்கல் பக்கம் போனால், நத்தத்துக்கும் போய் வரலாமே!


 நன்றி :

திருப்பூரில் மொத்தமாக பனியன் வாங்கி விற்பனை செய்லாம் வாங்க !

உலகின் மிகப் பெரிய பனியன் சந்தை திருப்பூர். தரம், வடிவமைப்பு உள்பட எல்லாவற்றிலும் சர்வதேச எதிர்பார்ப்பிற்கு  தன்னை அப்டேட் செய்து கொண்டிருப்பதால் இந்த பிஸினஸ் ரேஸில் வீழ்ந்திடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது திருப்பூர் குதிரை.
இந்த பனியன் பிரதேசத்தில் 'காதர் பேட்டை’ என்றொரு ஏரியா உங்களுக்குத் தெரியுமா? திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிர்புறம் இருக்கும் இந்த காதர் பேட்டை 'செகண்ட்ஸ் பனியன்’ என்றழைக்கப்படும் சிறிய அளவிலான டேமேஜ்களுடைய பனியன் துணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் ஏரியா. இந்த பேட்டையின் ஓராண்டு டேர்ன் ஓவர் சுமார் சில நூறு கோடிகளைத் தாண்டுமாம்.  
அப்படி என்னதான் நடக்கிறது காதர் பேட்டையில்? என்று இறங்கி அலசினோம்.  பிளாட்ஃபார்ம் கடையில் ஆரம்பித்து மெகா ஷோரூம்கள் வரை இந்த செகண்ட்ஸ் துணிகளை விற்பனை செய்யும் கடைகள் அறுநூறுக்கும் மேல் இருக்கின்றன.
எப்படி உருவானது இந்த காதர் பேட்டை என்பதுகுறித்து சொன்னார் 'திருப்பூர் செகண்ட்ஸ் பனியன் ஓனர்ஸ் அசோசியேஷன்’ துணைத் தலைவரான நாகராஜ். 
''1965-ம் ஆண்டுவாக்குல இந்த காதர் பேட்டை உருவாச்சு. திருப்பூர்ல இருக்கிற பனியன் கம்பெனிகளுக்கு பல நாடுகள்ல இருந்து டி-ஷர்ட், பனியன், ஷார்ட்ஸ், நைட் பேன்ட்ஸ் மாதிரியான துணிகளை தயாரிச்சு தரச் சொல்லி ஆர்டர் கொடுப்பாங்க. ஒரு லட்சம் பீஸ் ஆர்டர் கிடைச்சதுன்னா, ஒரு லட்சத்து பத்தாயிரம், இருபதாயிரம்னு தயாரிப்பாங்க கம்பெனி ஓனர்கள். காரணம், சில துணிகள் மெஷின்ல சிக்கி கிழிஞ்சிடும், மெஷின்ல உள்ள ஆயில் பட்டுடும். இது மாதிரி பிரச்னைக்குள்ளான பீஸை ஏற்றுமதி பண்ண மாட்டாங்க.

இப்படி கழிக்கப்பட்ட துணிகளை குறைஞ்ச விலையில மொத்தமா வாங்கிட்டு வந்து அப்படியேயும் அல்லது ஓட்டை விழுந்த இடத்துல பேட்ச் ஒர்க் பண்ணியும், ஆயில்பட்ட இடத்தை வாஷ் பண்ணியும் விற்பனை செய்யுறதுதான் காதர் பேட்டை பிஸினஸ் ஸ்டைல்'' என்றார் நாகராஜ்.
''நல்ல குவாலிட்டியான டி-ஷர்ட்டை ஷோரூம்ல போய் வாங்கினா ஐநூறு, அறுநூறு ரூபா சொல்லுவாங்க. ஆனா, அதே டி-ஷர்ட் சின்னதா ஒரு ஓட்டையோட இருக்குதுன்னா, இந்த காதர் பேட்டையில வெறும் முன்னூறு ரூபாய்க்கு கிடைக்கும். குழந்தைகளுக்கான ஜட்டி 10, 15 ரூபாயில் ஆரம்பித்து, பெரியவர்களுக்குத் தேவைப்படுகிற துணிகள் வரை மிகக் குறைந்த விலையில் இங்கு வாங்கிவிடலாம். தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் சமயங்களில் புதுத் துணிகள் பிஸினஸுக்கு இருக்கிற வரவேற்புக்கு நிகரான டிமாண்ட் இங்கேயும் இருக்கும்'' என்றும் சொன்னார் அவர்.
''காதர் பேட்டையில வெறும் சில்லறை விற்பனைகள் மட்டுமல்ல, மொத்தமா கொள்முதல் பண்ணிட்டு போயி வெளிமாநிலங்கள், வெளிநாடுகள்ல விற்கிற பிஸினஸையும் ஆயிரக்கணக்கான ஆளுங்க பண்ணிட்டிருக்காங்க'' என்கிறார்கள் இங்கு கடை நடத்தும் வியாபாரிகள்.
இந்த செகண்ட்ஸ் துணிமணிகளை நம் வியாபாரிகள் வாங்கிச் செல்வது ஒருபக்கமிருக்க,  சமீப காலமாக வெளிநாட்டைச் சேர்ந்த சில இளைஞர்கள் பெரிய அளவில் வாங்கிச் சென்று, நைஜீரியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் அதிக விலை வைத்து விற்கிறார்களாம். ''இதனால் உள்ளூர்க்காரர்களின் வியாபாரம் கெடுவதோடு, அரசாங்கத்தின் வருமானமும் குறைகிறது. முதலில் இவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்'' என்கிறார்கள் செகண்ட்ஸ் வியாபாரிகள்.
அடுத்தமுறை திருப்பூர் போனால் காதர் பேட்டைக்குப் போக மறக்காதீர்கள்!

 நன்றி :

Saturday, May 16, 2015

தொழில் ரகசியம்: கூடி வாழ்ந்தால் கோடிகள் குவியும்!

குருவி கட்டும் கூட்டுக்குள் குண்டு வைக்கக் கூடாது என்று பாடியும் கூட்டுக் குடும்பங்கள் வேட்டு வைத்து தகர்க்கப்பட்டு நியூக்ளியர் குடும்பங்கள் பெருகி வருகின்றன. `கிரேஸி மோகன்’ கூறுவது போல், கணவன் மனைவி சேர்ந்திருந்தாலே கூட்டுக் குடும்பம் என்று சந்தோஷப்பட வேண்டியது நிலைமை இன்று!


தொழில் ரகசியம் பகுதியில் குடும்பப் பிரச்சினை பற்றிப் பஞ்சாயத்து எதற்கு?

ஏனெனில் இந்த நாட்டுத் தொழில் களில் 80 சதவீதத்திற்கும் மேல் குடும் பங்களால் நிர்வகிக்கப்படுகிகின்றன. பலசரக்கு கடை முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை குடும்பங்கள் நிர்வாகம் செய்கின்றன.

குடும்பம் பிரிந்தால் உறவுகள் பிரியும். அது வீட்டுப் பிரச்சனை. அவ்வளவே. அதே குடும்பம் ஒரு கம்பெனியை நிர்வகிக்கும்போது வீட்டோடு தொழிலையும் பாதிக்கிறது. கம்பெனியில் பணிபுரிபவர் பிரச்சினை யாகிறது. நாட்டின் பிரச்சினையாகிறது.


பிரியும் உறவுகள்

பெரும்பாலும் குடும்பத் தொழில் கள் மூன்றாவது தலைமுறை தாண்டு வதற்குள் மூச்சு முட்டி, மோதல் ஆரம்பித்து அண்ணன் தம்பிகள் அடித்துக்கொண்டு, அக்கா தங்கைகள் சண்டையிட்டுக்கொண்டு திரிகிறார்கள். இதை நான் சொல்லவில்லை. உலக ஆய்வுகள் கூறுகின்றன.

‘பிர்லா’ குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை கர்லா கட்டையால் சண்டையிட்டுக் கொண்டது. பஜாஜ் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை பேஜாராகி பஜாரில் இறங்கி சண்டையிட்டது. அம்பானி குடும்பம் ஒரு படி மேலே சென்று இரண்டாவது தலைமுறையிலேயே இடித்துக்கொண்டு நின்றது.


சிறக்கும் நிறுவனங்கள்

அதற்காக எல்லா குடும்பங்களும் இப்படி சட்டையைப் பிடித்து, கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டு, வீச்சரிவாளை வீசி, கோர்ட்டிற்கு செல்லும் ரகமில்லை. குடும்ப தொழிலாய் பிறந்து, ஒன்றாக இருந்து, பலர் கண்பட தழைக்கும் கம்பெனிகள் இருக்கத்தான் செய்கின்றன.

ஜெர்மனியைச் சேர்ந்த `மெர்க்’ 1668ல் குடும்ப கம்பெனியாய் பிறந்து இன்று வரை ஜர்க் இல்லாமல் ஸ்மூத்தாய் பயணிக்கிறது. 1868ல் துவங்கிய `டாடா’ இன்றும் டாப்பாகத்தான் இருக்கிறது. 1897ல் ஆரம்பித்த `கோத்ரெஜ்’ அவர்கள் பீரோவைப் போல் இன்றும் உறுதியாக இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த ‘முருகப்பா குழுமம்’ நூறு வருடங்களாக முன்னணியில் நின்று முன்னேறி வருகிறது.


சேர்ந்திருக்க பல வழிகள்

குடும்பங்கள் சேர்ந்திருப்பது எப்படி என்று தெரிந்துகொள்ள பல புத்தகங்கள் உண்டு. குடும்பத் தொழில் சேர்ந்திருந்து தழைக்கும் விதங்களை ஆராய்ந்து எழுதியிருக்கிறார் ‘கவில் ராமச்சந்திரன்’. ’The ten commandments of Family Business’ என்ற புத்தகத்தில் குடும்ப தொழில்களுக்கு அறிவுரை பல கூறியிருக்கிறார்.

நடுவர் நியமனம்

பேசித் தீர்க்க முடியாத பிரச்சினை ஏதுமில்லை. குடும்பத் தொழிலை நிர்வகிப்பவர்கள் ரெகுலராக உட்கார்ந்து பேசினாலே பிரச்சினைகள் பிறக்காது. பிரச்சினைகளைப் பிரித்து மேய்ந்து அலசி முடிவெடுக்காமல் விடுவதில்லை என்று வைராக்கியத்துடன் பேசுங்கள். பேச்சை முறைப்படுத்த முடிந்தால் சாலமன் பாப்பையா போல் ஒரு நடுவரை, நிர்வாக ஆலோசகராக வைத்துக்கொண்டாலும் தப்பில்லை.


தழைக்கும் குடும்பத் தொழில்

தமிழகமெங்கும் கடை திறந்து விரிந்து வெற்றி பெற்றிருக்கும் மதுரையைச் சேர்ந்த ‘தங்கமயில் ஜுவல்லரி’ கட்டுக்கோப்பான ஒரு குடும்பத் தொழிலாகவே இன்றும் திகழ்கிறது. இதற்கு முக்கியக் காரணம் கம்பெனியை துவங்கிய சகோதரர்களும் அடுத்த தலைமுறையும் தங்கள் குடும்பங்களோடு சேர்ந்து மாதமொரு முறை மனம் விட்டு அனைத்து விஷயங்களையும் முறையாகப் பேசுகிறார்கள். பேசுவதோடு நில்லாமல் என்னென்ன பேசப்பட்டது, என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்ற மீட்டிங் மினிட்ஸ் எழுத்து பூர்வமாக அனைவருக்கும் தரப்படுகிறது.

ஒளிவுமறைவு இல்லாத பேச்சு பரிவர்த்தனையே தங்கள் வெற்றிக்கு அடிப்படை என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதோடு குடும்பத்தின் பிணைப்புதான் தங்கள் தொழிலின் அஸ்திவாரம் என்பதை உணர்ந்து செயல்படுகிறார்கள். அதானாலேயே குடும்பத்தோடு தங்கள் தொழிலையும் தழைக்க வைக்க முடிகிறது அவர்களால்.

பிரச்சினைகள் வரும். பிரச்சினைகள் இல்லாத குடும்பங்கள் உண்டா? சேர்ந்து அமர்ந்து பேசும்போது பிரச்சினைகள் தீர வழி கிடைக்கும். மனம் தெளிவாகும். எண்ணங்களில் மட்டுமல்ல, உறவு களிலும் தெளிவு பிறக்கும்.


தொழில் ரீதியிலான அணுகுமுறை

குடும்பத் தொழில்கள் நசிய இன்னு மொரு காரணம் தொழில்முறை (புரொபஷனலிஸம்) இல்லாத நிர் வாகம். பிள்ளைகள் பெற்றுவிட்டோம் என்பதற்காக அனைவருக்கும் பிசினஸில் ஏதாவது ஒரு பொறுப்பை கொடுக்கவேண்டும் என்ற தலை யெழுத்து இல்லை. கட்டித் தொலைத்த பாவத்திற்காக மனைவியின் தம்பிக்கு வேலை கொடுக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

இப்படி கொடுத்து தொலைப்பதால்தான் தொல்லைகள் ஆரம்பிக்கின்றன. இதற்குத்தான் நிர்வாகங்களுக்கு புரொபஷனலிஸம் தேவைப்படுகிறது. வெளி ஆட்களுக்கு வேலை கொடுப்பதுதான் புரொபஷன லிஸம் என்றில்லை. விருப்பு வெறுப் பில்லாமல் கம்பெனி நிர்வாகத்திற்கு யார் பொருத்தமானவரோ அவரை நியமித்து, நிர்வாகத்திற்கு எது தேவையோ அதை செய்வது தான் புரொபஷனலிஸம்.


குறுக்கீடு கூடாது!

பொறுப்பை ஒருவருக்கு கொடுத்த பின் அவர் உங்கள் மகனே ஆனாலும் அவர் வேலையில் குறுக்கிடாதீர்கள். அவருக்குக் கீழ் உள்ளவர்களை அழைத்து விசாரிப்பது, அவர்களுக்கு உத்தரவுகள் போடுவது என்று செய்தால் நிர்வாகம் எடுப்பார் கைப்பிள்ளையாகி தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்றாகி கேட்க நாதியில்லாத நாசத்தில் போய் நிற்கும்.

குடும்பத் தலைவர்கள் பலர் உயில் எழுதுவதில்லை. ஏதோ உயில் எழுதிவிட்டால் அன்றிரவே நடு வீட்டில் தலைமாட்டில் விளக்கெறிய படுக்க வேண்டியிருக்குமோ என்ற பயம். குடும்பத் தொழிலிலும் இதே நிலைதான். Succession planning என்று ஒன்று இருப்பதே நம்மவர்களுக்கு தெரியாது.

ஏதோ சாகாவரம் பெற்று சாஸ்வதமாய் நிர்வாகம் செய்யும் மார்கண்டேய மேனேஜர் போல் இருந்து விட்டு கடைசியில் போட்டோவில் மாலை தொங்க சிரிக்கும் காலம் வரும் போது அடுத்த தலைமுறை நான், நீ என்று அடித்துக்கொண்டு வீதியில் நிற்கும். தொழில் தேய்ந்து காய்ந்து கருகும்.

வழிவிடுங்கள்

இருக்கும்போதே அடுத்த தலைமுறைக்கு வழி விட்டு அவர்களை வழிநடத்திச் சென்றால் இந்தப் பிரச்சினை வராது. அடுத்த தலைமுறையில் யார் எந்த பொறுப்புக்கு சிறந்தவர் என்று கண்டறிந்து அவரை அந்த பொறுப்புக்கு தகுதியுடையவராக வளர்ப்பது குடும்பமும் தொழிலும் சேர்ந்து தழைக்க உதவும்.


நேரடி பயிற்சி அவசியம்

தொழிலதிபர்கள் பலர் தங்கள் பிள்ளை படிப்பு முடிந்து பரிட்சை எழுதிய கையோடு பரிட்சை பேப்பரை மடித்துக் கொடுத்து விட்டு நேராக ஆபிஸ் வந்து தொழிலை கவனிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் வெளி கம்பெனிகளில் சில காலம் பணி புரிந்து அனுபவம் பெற்று சொந்த தொழிலுக்கு வருவதே சிறந்தது என்பது வல்லுனர் களின் கருத்து.

நல்ல கம்பெனியில் வேலை செய்தால் அதன் சூழலையும், படிப்பினைகளையும் கற்று அதை சொந்த தொழிலில் செயல்படுத்த முடியும். முதலாளியாய் இல்லாமல் சாதாரண ஊழியனாய் இருக்கும்போது கிடைக்கும் படிப்பினைகளுக்கு ஈடு இணை இல்லை. சொந்த கம்பெனியில் ஊழியனாய் இருக்க முடியுமா? இருக்க விடுவார்களா?


நிர்வாகக் கல்லூரிகள்

குடும்ப தொழில்களை நிர்வகிக்கும் முறைகளை நிர்வாக கல்லூரிகள் பாடமாகவே கற்றுக்கொடுக்கின்றன. முடிந்தால் சேர்ந்து படியுங்கள். ஃபெயில் ஆகிவிட்டால் ‘ஸ்டாண்ட் அப் ஆன் தி பெஞ்ச்’ என்பார்களோ என்று பயப்படா தீர்கள். குடும்ப தொழில் புரிபவர்கள் தான் உங்கள் வகுப்பில் இருப்பார்கள். அவர்கள் கஷ்டங்களை தெரிந்துகொண் டால் சற்று ஆறுதலாகக் கூட இருக்கும்!

நீங்கள் சிரித்தால் உலகம் சேர்ந்து சிரிக்கும். நீங்கள் அழுதால் உலகம் இன்னும் பலமாய் சிரிக்கும்! குடும்ப சண்டையையே வேலையை விட்டு வேடிக்கை பார்க்கும் சமுதாயம் குடும்பத் தொழில் சண்டையிட்டால் சும்மா இருக்குமா? லீவ் போட்டு உட்கார்ந்து பார்க்கும். டீவி சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும். குடும்ப மானம் கொத்தாய் போகும். குடும்பத் தொழில் குட்டிச்சுவராய் ஆகும்.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. கூடி நிர்வகித்தால் கோடி கோடியாய் புரளும் என்பது உண்மை! 

 நன்றி :

Saturday, May 2, 2015

பான் கார்டு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் !!

நீங்கள் இந்திய பிரஜையாக இருந்தாலும் சரி அல்லது வெளி நாட்டில் வாழும் இந்தியராக இருந்தாலும் சரி, இந்திய அரசாங்கத்திடம் வரி கட்டினாலோ அல்லது பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்தாலோ உங்களிடம் கண்டிப்பாக பான்(PAN) கார்டு இருக்க வேண்டும். 

 பான் என்றால் என்ன?
 பான்(PAN) என்பதன் விரிவாக்கம் "பெர்மனெண்ட் அக்கௌன்ட் நம்பர்" (நிரந்தர கணக்கு எண்). இது ஒரு 10 இலக்கு வரிவடிவ எண் குறியீடு. இதனை ஒரு பிளாஸ்டிக் தகடு வடிவத்தில் இந்திய வருமான வரி துறை வழங்குகிறது. ஒவ்வொரு தனி நபர், ஹிந்து கூட்டுக் குடும்பம், நிறுவனம் முதலியவற்றுக்கு ஒரு தனித்தன்மையான எண் வழங்கப்படும். இந்த என்னை பற்றி விரிவாக சிறிது நேரத்தில் பார்ப்போம். 
பான் என்பது ஒரு நிரந்தரமான எண்ணாகும். உங்கள் முகவரி மாறினாலோ அல்லது நீங்கள் வாழும் மாநிலத்தை மாற்றினாலோ இதில் எந்த பாதிப்பும் இருக்காது. மேலும் ஒருவருக்கு அல்லது ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பான் கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பதும் சட்டப்படி குற்றமாகும். பான் கார்டு வழங்கும் முக்கிய காரணம்? உலகளாவிய அடையாளத்தை ஏற்படுத்தவே. இதனை வைத்து வரி, பணப் பரிமாற்றங்கள், கடன்கள், முதலீடுகள், நிலம் வாங்குதல் மற்றும் விற்றல் மற்றும் வரி கட்டுபவரின் இதர செயல்பாடுகளின் பல ஆவணங்கள் மற்றும் தகவல்களை ஒரு மையத்தில் இணைத்து கண்காணிக்கலாம். இதனை கண்காணிப்பதால் இவை மறைமுகமாக வரி ஏய்ப்பை தடுக்கிறது. இந்த எண் அமெரிக்க பிரஜைகளுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அளிக்கும் சோசியல் செக்யூரிட்டி எண்ணிற்கு நிகரானவையாகும். 

பான் பற்றிய புனைகதை: 
 பான் கார்டு என்பது வரி கட்டும் காரணத்திற்காக மட்டுமே பயன்படுகிறது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. பான்எண்கள் வருமான வரிக்காக தேவைபடுகிறது, ஆனால் அதற்கும் பான் கார்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பான் கார்டின் நகல் பல வணிக பரிமாற்றங்களுக்கு அடையாளத்தை நிரூபிக்க பயன்படுகிறது. உதாரணத்திற்கு புது வங்கி கணக்கு திறக்க, ஒரு சொத்தை அல்லது வண்டியை வாங்கவோ விற்கவோ, வீட்டிற்கு தொலைபேசி இணைப்பு பெற, டீமாட் மற்றும் மியூசுவல் பண்ட் போன்ற முதலீடுகள் செய்ய PAN கார்டின் நகல் தேவைப்படும். 

பான் கார்டிற்கு விண்ணப்பிக்க:
 பான் கார்டு வேண்டும் என்றால், யார் வேண்டுமானாலும் அதற்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு நீங்கள் வேலை பார்க்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இதற்கு வயது, குடியுரிமை என்று எந்த வரம்பும் கிடையாது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மற்றும் பிறந்த குழந்தைக்கு கூட விண்ணப்பிக்கலாம். அவர்களுக்காக அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் கையெழுத்திட வேண்டும். 

 புதிய பான்: 
விண்ணப்பதாரர் இதற்கு முன் பான் கார்டிற்கு விண்ணப்பித்ததில்லை என்றாலும், அவருக்கு ஏற்கனவே பான் ஒதுக்கப்படாமல் இருந்தாலும் சரி, அவர் வருமான வரித்துறை (ITD) இணையதளத்திற்கு செல்லலாம். அவர்களுக்கு பான் ஒதுக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பதே முதல் படி. - 
ஒரு வேளை அவருக்கு பான் ஒதுக்கப்படாமல் இருந்தால் கீழ்கண்ட இணையதளத்தில் போய் விண்ணப்பிக்கலாம். அங்கயே உங்கள் விண்ணப்பத்தின் இருப்பு நிலையையும் அறிந்துக் கொள்ளலாம். அந்த இணையதளங்கள்: 
o யூடிய் பான்(UTI) கார்டு விண்ணப்ப படிவம் 
o என்ஸ்டிஎல்(NSDL) விண்ணப்ப படிவம் - பான் - நேரடியாக சென்று விண்ணப்பிக்க வேண்டுமென்றால் உங்கள் அருகில் இருக்கும் டின்-பான்(TIN-PAN) மையங்கள், என்ஸ்டிஎல் டின்(NSDL-TIN) அல்லது யூடிய் பான்(UTI PAN) விண்ணப்ப மையத்தை அனுகலாம்.
 புதிய பான் கார்டு விண்ணப்பிக்க கீழ்கண்ட பட்டியலில் இருந்து குறைந்தது இரண்டு அடையாள சான்றிதழ் மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை வழங்க வேண்டும்:
 - மெட்ரிகுலேஷன் சான்றிதழ் 
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவன பட்டம் 
- கடன் அட்டை - வங்கி அறிக்கை
- ரேஷன் கார்டு 
- ஓட்டுனர் உரிமம்
- வாக்காளர் அடையாள அட்டை
- பாஸ்போர்ட் 

 பான் கார்டின் மறு அச்சடிப்பு: 
- உங்களுக்கு பான் எண் ஒதுக்கப்பட்ட பின்பு, பான் கார்டை பெறுவதற்கு விண்ணப்பத்தை உபயோகிக்க வேண்டும். இந்த புது பான் கார்டில் அதே பான் எண் தான் இருக்கும். என்ஸடிஎல்(NDSL) இணையதளத்திற்கு சென்று மறு அச்சடிப்புக்கு விண்ணப்பிக்கலாம். என்ஸடிஎல் மற்றும் யூடிய் இணையதளங்களில் உங்கள் பான் எண்ணை தேடி கண்டுப்பிடிக்கலாம். 

பான் எண்ணுடைய அமைப்பு: 
 பான் எண்களின் புதிய அமைப்பு போனெடிக் சவுண்டெக்ஸ் கோட் நெறிமுறைபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் ஒவ்வொரு எண்ணும் தனித்தன்மையுடன் விளங்கும். இது போனெடிக் பான் (PAN) எண் உருவாக உதவி புரியும்: 
 i. வரி கட்டுபவரின் முழுப்பெயர் 
ii. பிறந்த தேதி/நிறுவனம் தோன்றிய தேதி 
iii. ஸ்டேடஸ் 
iv. தனி நபர் என்றால் பாலினம் 
v. தனி நபர் என்றால் தந்தையின் பெயர் (திருமணமான பெண்களாக இருந்தாலும் சரி). 
பான் கார்டு வழங்கப்பட்ட தேதி பான் கார்டில் உங்கள் புகைப்படத்திற்கு வலது பக்கமாக குறிப்பிடப்பட்டிருக்கும்.  

10 இலக்கு வரிவடிவ எண்ணின் வரிசை:
  பான் எண்ணின் 10 இலக்கு எண்ணின் வரிசையத்தை பற்றி விலாவரியாக பார்ப்போமா: 
1. முதல் ஐந்து எழுத்துக்கள் முக்கியமானவை. அவை வரிவடிவ எண் அமைப்போடு இருக்கும். 
2. அவைகளில் முதல் மூன்று எழுத்துக்கள் அகர வரிசைப்படி அமைந்திருக்கும். இந்த வரிசையம் AAA-வில் ஆரம்பித்து ZZZ-ல் முடியும். 
3. நான்காவது எழுத்து விண்ணப்பதாரரை பொறுத்து தீர்மானிக்கப்படும்: 
C - குழுமம் (கம்பெனி) 
P - தனி நபர் 
H - ஹிந்து கூட்டு குடும்பம்(HUF) 
F - நிறுவனம் 
A - தனி நபர்களின் இணக்கம் (AOP) 
T - அறக்கட்டளை 
B - பாடி ஆப் இண்டிவிஜூவல்ஸ் (BOI) 
L - லோக்கல் அதாரிட்டி 
J - செயற்கையான வழக்கு மன்ற நடவடிக்கை சார்ந்த நபர் 
G - அரசாங்கம் (உதாரணம் - கம்பெனி = AAACA; செயற்கையான வழக்கு மன்ற நடவடிக்கை சார்ந்த நபர் = AAAJA; HUF = AAAHA;) 
4. ஐந்தாவது எழுத்து கீழ்கண்டவைகளின் முதல் எழுத்தாகும்: 
a) தனிநபர் என்றால் உங்கள் குடும்பப் பெயரின் முதல் எழுத்து அல்லது 
b) மற்ற அனைவருக்கும் தங்களின் நிறுவனம், டிரஸ்ட், குழுமம் போன்றவற்றின் முதல் எழுத்து. 
(உதாரணத்திற்கு - லிசா சனமொலு [தனிநபர்] = AAAPC4444A; லிசா சனமொலு [HUF] = AAAHL4444A; பொது நிறுவனம் = AAAFG4444A) 
5. அடுத்த நான்கு எழுத்துக்கள் 0001-லிருந்து 9999 வரை செல்லும் வரிசைய எண்கள். 
6. கடைசி எழுத்து அகர வரிசைச் சார்ந்த சரிபார்ப்பு இலக்கம் புதிய 
போனெடிக் பான் (PPAN): 
புதிய போனெடிக் பான் (PPAN)-ஆல் ஒரே பெயரைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒரு பான்-னிற்கு மேல் ஒதுக்கப்படும் தவறு நடக்காது. பொருந்தும் பான் கார்டு கண்டுபிடிக்கப்பட்டால், பயனாளிக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கப்படும். இரட்டிப்பான பான் கார்டு அறிக்கை ஒன்றும் வெளியிடப்படும். இந்த நேரத்தில் சரிப்பார்க்கும் அதிகாரி இந்த பான் கார்டு இரட்டிப்பை நிராகரித்தால் தான் புதிய பான் ஒடுக்கப்படும். இந்த புதிய அமைப்பின் படி ஒரு தனித்துவம் பெற்ற பான் எண்ணை வரி கட்டுபவர்கள் 17 கோடி பேருக்கு ஒதுக்கலாம். முடிவுரை: உங்கள் பான் கார்டின் முக்கியத்துவத்தை, அந்த கார்டு மற்றும் பான் எண்ணின் தேவைகளை இப்போது புரிந்திருப்பீர்கள். உங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் சிறிது நேரம் செலவழித்து இன்றே விண்ணப்பம் செய்யவும்.





நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.

 நன்றி :
http://tamil.goodreturns.in/
Related Posts Plugin for WordPress, Blogger...