மொத்தமாக சுடிதார் வாங்க,மணப்பாறைக்கு வாங்க!

காலத்திற்கேற்ற நாகரிக உடை… எளிதில் அணிந்துகொள்ளும் வசதி… என பல
சிறப்புகள் இருப்பதால் இன்றைய இளம் பெண்களின் ஏகோபித்த சாய்ஸ்-ஆக
இருக்கிறது சுடிதார். திருமணமான பெண்களிடமும் புடவைக்கு அடுத்தபடியாக
முக்கிய இடம் பிடித்துவிட்டது சுடிதார். இந்த மாடர்ன் உடையை நல்ல தரத்தில்,
பட்ஜெட் விலையில் வாங்க புத்தாநத்தம் சிறந்த தேர்வாக இருக்கும்.
மணப்பாறையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த ஊர்.
இந்த ஊரில் ஏறத்தாழ நூற்றுக்கும் மேலான மொத்த மற்றும் சில்லறை வியாபாரக்
கடைகளிலும் சுடிதார் மட்டுமல்லாமல் மிடி, பிராக், நைட்டி, பெட்டிகோட்,
பாபாசூட் என அனைத்தும் உற்பத்தி செய்து விற்கின்றனர். பள்ளி, கல்லூரி
சீருடைகளை மொத்தமாக இங்கு ஆர்டர் கொடுத்தும் வாங்கிச் செல்கின்றனர்.
இதுபற்றி தனியார் கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:
‘மும்பை, சூரத், அஹமதாபாத் போன்ற ஊர்களில் இருந்து நாங்கள் துணிகளை
வாங்குவதால் மிகக் குறைந்த விலையில் எங்களால் சுடிதார்களைத் தயாரிக்க
முடிகிறது. தவிர, இந்த ஊரைச் சுற்றி டெய்லரிங் தெரிந்தவர்கள் நிறைய பேர்
இருப்பதால், முழு நேரமாக ஆட்களை வேலைக்கு அமர்த்தி தைக்கிறோம். எனவேதான்,
மற்ற இடங்களைவிட குறைவான விலையில், தரமாக எங்களால் பல வகையான ஆடைகளைத்
தயாரித்து விற்க முடிகிறது. சோலிமிடி, ரங்கீலா, பட்டியாலா, மசாக்கலி என
எல்லாவகையான மாடல் சுடிதார்களும் இங்கு கிடைக்கும். இங்கு சுடிதார்,
நைட்டி, மிடி, பாபாசூட், பெட்டிகோட் என எல்லாவற்றையும் உற்பத்தி
செய்கிறோம். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு பிராண்ட் பெயரில் சுடிதார்களை தயார்
செய்கின்றார்கள்.
இங்கு நார்மல் சுடிதார்கள் ரூபாய் 160-லும் கல்வேலைபாடுகள்,
எம்பிராய்டரிங் ஒர்க்ஸ் என அதிக வேலைபாடுகள்கொண்ட சுடிதார்கள் அதிகபட்சம்
ரூபாய் 2,500-க்கும் கொடுக்கிறோம். ஒன்றிரண்டு என்கிற எண்ணிக்கையில்
வாங்கும்போது மொத்தமாக வாங்குவதைவிட 15% விலை அதிகமாக விற்கிறோம்.
இங்கிருந்து வாங்கிச்செல்லும் சுடிதார்களை 40 சதவிகிதத்திற்கு அதிகமாக விலை
வைத்து விற்க முடிகிறது.
இங்கு நைட்டிகளும் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
குறைந்தபட்சம் ரூபாய் 70-ல் இருந்தே நைட்டிகள் கிடைக்கின்றன. இங்கு நீங்கள்
மொத்தமாக ஆர்டர் தந்து வாங்கும்போது நீங்கள் விரும்பும் டிசைன்களில்,
நீங்களே தேர்வு செய்யும் துணியின் கலர்களிலும் சுடிதார்களை தைத்து
தருகிறோம்.
எந்த ஒரு பொருளும் அதை உற்பத்தி செய்யும் இடத்தில் வாங்கும்போது மற்ற
இடங்களைக் காட்டிலும் விலை குறைவாகவே கிடைக்கும். அதற்கு ஏஜென்டுகள்,
போக்குவரத்து, விளம்பரம் என பல செலவுகளை தவிர்க்க முடிவதே காரணம்.
இங்கிருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும், கேரளா போன்ற
வெளிமாநிலங்களுக்கும் ஆடைகளை அனுப்புகிறோம்” என்றார்.
இங்கு காட்டன், சிந்தடிக் என எல்லா வகையான மெட்டீரியல்களிலும்,
குளிர்காலங்கள், கோடைகாலங்கள் என எல்லா வகையான காலநிலைகளிலும் அணியக்கூடிய
சுடிதார்களும் லேட்டஸ்ட் மாடல்களில் கிடைக்கிறது. அடுத்த முறை மணப்பாறை வரை
செல்கிறீர்கள் எனில், புத்தாநத்தத்துக்கும் ஒரு விசிட் அடித்து,
சுடிதார்களை அள்ளிக்கொண்டு வரலாமே!